Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியை சிறப்பு தொழில் பிரிவில் சேர்த்து முதலீட்டு மானியம் வழங்கப்படும்- மு.க.ஸ்டாலின்

ஆகஸ்டு 25, 2022 05:21

திருப்பூர்: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து அரசு, கட்சி விழாக்களில் பங்கேற்று வருகிறார். இதில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து வருகிறார். திருப்பூரில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற தொழில்முனைவோர் திருப்பூர் மண்டல மாநாடு திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண் ராய் வரவேற்றார்.

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்டி தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், ரூ.100 கோடி மதிப்பில் பிணையில்லாத கடன் வசதிக்கான தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், தாமதமான வரவினங்களுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளம், ரூ.15.34 கோடி மதிப்பிலான திருப்பூர் நாரணாபுரம் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

மேலும் கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.22கோடி மதிப்பில் தொழிலாளர் தங்கும் விடுதி கட்டிடப்பணி, ரூ.18.13 கோடி மதிப்பில் கோவை சொலவம்பாளையம் தனியார் தொழிற்பேட்டை கட்டிடப்பணி ( கொசிமா), ரூ. 24.55 கோடி மதிப்பில் அரியாகவுண்டன்பட்டி வெள்ளி கொலுசு பொது வசதி மையம் கட்டிடப்பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- விடுதலை போராட்ட காலத்திலும் , திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கிய இடமான திருப்பூரை தி.மு.க. ஆட்சியில் தான் மாநகராட்சியாக தரம் உயர்த்தினோம். இப்பகுதியை சேர்ந்த முக்கிய நபர்கள் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்கள். அப்போதே திருப்பூரை தனிமாவட்டமாக கருணாநிதி அறிவித்தார்.

திருப்பூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது பின்னலாடைதான். அந்த அளவுக்கு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மாநில மக்களுக்கும் திருப்பூருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமல்லாமல், தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி. இன்றைய தொழிலாளி , நாளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருத்தமான சொற்கள். திருப்பூரின் மொத்த பின்னலாடை உற்பத்தி ஏறத்தாழ 60,000 கோடி ரூபாய். இதில் 50 விழுக்காட்டிற்கு மேல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளரும் போது சிறு தொழில் முனைவோர் உருவாவார்கள். அதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வு செழிக்கிறது. பெருந்தொழில்களை மட்டுமே நம்பி இருக்காமல் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் ஊக்கமடைய வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது.

அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதில் வேளாண்மை துறைக்கு அடுத்தபடியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முக்கிய பங்காற்றுகிறது. தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற முழக்கத்தோடு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களின் முக்கிய தேவைகளுக்கு உதவிகள் செய்து வருகிறோம். இத்தகைய தொழில்கள் சென்னையை அல்லது குறிப்பிட்ட மாநகரத்தை மையப்படுத்தி மட்டுமே அமைந்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம். 

அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும் என்று நினைக்கும் தமிழக அரசானது தென்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இத்தகைய முதலீட்டு மாநாடுகளை நடத்தி வருகிறது. கடந்த 15 மாதத்திற்குள் தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகளின் மூலமாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதன் மூலம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 727 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் ஈர்த்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 1300 கோடி ரூபாய் முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள 49 எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களும் அடங்கும். இன்றைய நாள் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் என்னால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சொத்து பிணையில்லா கடன்களை எளிதாகப் பெறலாம். இணையத் தளம் மூலம் இத்திட்டம் இயங்கும். முதல் கட்டமாக ஆறு வங்கிகளை இணைப்போம். அடுத்த ஆண்டுக்குள் அனைத்து வங்கிகளும் இணைக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு 2092 நிறுவனங்களுக்கு 2113 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது. 

இதில் 99 விழுக்காடு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்குத்தான் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன்தொகையை பொறுத்தமட்டில் 86 விழுக்காடு தொகை எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெருங்குழுமங்களுக்கான பொது வசதி மையங்கள் தலா 100 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புத்தாக்க மற்றும் புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கோடு சென்னை நந்தம்பாக்கத்தில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் 75 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மாநில புத்தொழில் மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்,இளைஞர்கள் படிப்பில் மட்டுமின்றி அறிவில், சிந்தையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான 'நான்முதல்வன்' என்ற திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் மாநிலம் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத் தொழில் மையத்திலும் ஒரு ஏற்றுமதி வழிகாட்டி மையம் விரைவில் தொடங்கப்படும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் பகுதிகளில் கயிறு மற்றும் கயிறு சார்ந்த தொழில்கள் ஒரு முக்கிய பொருளாதார முன்னேற்றத்திற்கான தொழிலாக விளங்குகிறது. 

தமிழகம் முழுவதும் கயிறு குழுமங்கள் உருவாக்கி கயிறு தொழிலை மேம்படுத்துவதன் மூலம் தொழில் முனைவோர்கள் மட்டுமல்லாமல் தென்னை விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கோடு தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை இங்கு வெளியிடலாம் என நினைக்கிறேன். ஹோம் டெக்ஸ்டைல்ஸ் எனப்படும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் ஆண்டொன்றுக்கு 8000 கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4000 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வகைப் பொருட்கள் தயாரிப்பை சிறப்பு வகைத் தொழில்கள் பிரிவில் சேர்த்து, எம்.எஸ்.எம்.இ., துறையின் மூலம் முதலீட்டு மானியம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். இக்கோரிக்கை ஏற்கப்படுகிறது. சிறப்பு வகைத் தொழில்கள் பிரிவில் சேர்க்கப்பட்டு முதலீட்டு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கிறேன். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் பயன்பெறும். இதன் மூலமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். 

தலைப்புச்செய்திகள்