Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தினந்தோறும் கனிமக்கொள்ளை; தடுப்பார் எவருமில்லை

செப்டம்பர் 02, 2022 09:13

பொள்ளாச்சி: கேரளாவின் கனிமவள தேவையை பூர்த்தி செய்ய, கோவை மாவட்டத்தில் இருந்து சட்ட விரோதமாக கனிமங்கள் கடத்திச் செல்லப்படுகின்றன.
பல கோடி ரூபாய் 'மாமூல்' கிடைப்பதால், சுற்றுச்சூழல், கனிம வளத்தை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகளே, தவறு செய்யும் ஆளும் கட்சியினருக்கு பக்கபலமாக உள்ளனர்.கேரளாவில் ஆற்றில் மணல் எடுக்கவும், பாறைகளை உடைத்து கற்கள் எடுக்கவும், எம்.சாண்ட் உற்பத்தி செய்யவும் தடை உள்ளது. அந்த மாநிலத்துக்கு தேவையான கனிமவளங்கள், தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன.

அதுவும், 70 சதவீதம் தேவையை கோவை மாவட்டமே பூர்த்தி செய்கிறது. கோவை மாவட்டத்தில், 2019ல் 199 குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, 122 குவாரிகள் செயல்படுகின்றன. பொள்ளாச்சி தாலுகாவில், 26 குவாரிகள், ஆனைமலையில், 5; கிணத்துக்கடவில், 47 குவாரிகள் என, பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் மொத்தம், 78 குவாரிகள் உள்ளன.

இந்த குவாரிகளில் பெரும்பாலும், எம்.சாண்ட், பி.சாண்ட், சைஸ் கற்கள், சக்கைக்கற்கள் என, ரகம் வாரியாக உடைத்து எடுக்கப்படுகின்றன. அதில், 20 சதவீதம் உள்ளூர் கட்டுமான பணிகளுக்கும், 80 சதவீதம் கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.பொள்ளாச்சி கோட்டத்தில் இருந்து, தினமும், குறைந்த பட்சம், 600 லோடு கனிமங்கள் கேரளாவுக்கு செல்கின்றன. கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. 'முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்' என, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியிலும், கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்லப்பட்டன. 'பர்மிட்' அளவை விட அதிகமாகவும், ஒரே 'பர்மிட்' பயன்படுத்தி பல முறையும் கனிம வளம் கடத்தப்பட்டது. இந்த அத்துமீறலுக்காக, அதிகாரிகளுக்கும், அ.தி.மு.க., தலைமைக்கும் குவாரிகளில் இருந்து நேரடியாக 'கப்பம்' செலுத்தப்பட்டது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அத்துமீறல் அதிகரித்துள்ளதுடன், ஆளுங்கட்சியின் தலையீடும் நேரடியாக உள்ளது. அமைச்சர்கள் மட்டத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாவதால், அரசு அதிகாரிகள் எவரும் விதிமீறல்களை கண்டுகொள்வதில்லை.பொதுவான வழித்தடத்தில், தனிப்பட்ட முறையில் வசூல் மையம் அமைத்து, கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்லும் டிப்பர் லாரிகளில், யூனிட் அடிப்படையில் வசூல் வேட்டை நடத்தினர்.

இந்த விஷயத்தை, பொள்ளாச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில், பா.ஜ., தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தினார்.இதையடுத்து, பொது இடத்தில் செயல்பட்ட வசூல் மையங்கள் கைவிடப்பட்டன. மாறாக, குவாரிக்கு ஒரு ஆள் நியமித்து, வசூல் செய்து ரசீது வழங்குகின்றனர். ஒரு யூனிட்டுக்கு, 400 ரூபாய் வசூலித்து, நியமிக்கப்பட்டுள்ளவர்களால் ரசீது வழங்கப்படுகிறது. அந்த ரசீது இருந்தால் மட்டுமே மாநில எல்லையை கடந்து, கனிமம் கொண்டு செல்ல முடியும்.ஆளுங்கட்சிக்கு 'கப்பம்' செலுத்தாமல் சென்றால், அவர்களே போலீசுக்கு தகவல் கொடுத்து, அந்த லாரியை பிடித்து, தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்து விடுகின்றனர்.
கனிம கடத்தலில், பொள்ளாச்சி பகுதியில் மட்டும் தினமும், 15 லட்சம் ரூபாய் வீதம், மாதத்துக்கு, 5 கோடி ரூபாய் ஆளுங்கட்சிக்கு 'மாமூல்' செல்கிறது. இது தவிர, குவாரிகளில் அதிக அளவுக்கு ஆழத்துக்கு பாறையை உடைப்பது, அதிக வெடிமருந்து பயன்படுத்துவது உள்ளிட்ட விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் இருக்க, ஒவ்வொரு குவாரியில் இருந்தும், மாதத்துக்கு, குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஆளுங்கட்சிக்கு 'கப்பம்' செலுத்துகின்றனர்.

இந்த வகையில் குவாரிகளில் இருந்து மட்டும், மாதம், 60 லட்சம் ரூபாய் 'மாமூல்' செல்கிறது. மேலும், குவாரிகள் தரப்பில் இருந்து, வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார், கனிம வளத்துறை அதிகாரிகள், லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் என, அனைத்து தரப்பினருக்கும் மாதந்தோறும் 'கவனிப்பு' செல்கிறது.குவாரிகள் செயல்படுவதும், கேரளாவுக்கு கனிம வளம் கடத்தலும், ஆளுங்கட்சிக்கு பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கிறது. இதை எக்காரணம் கொண்டும் இழந்து விடக்கூடாது என்பதற்காக, 'அதிகாரிகள் தரப்பில் எந்த வித தலையீடும் கூடாது' என, கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'குவாரிகளில் கண்துடைப்பு ஆய்வு மட்டுமே செய்ய வேண்டும். 'டிப்பர்' லாரிகளில் ஓவர் லோடு, 'பர்மிட்' இல்லை என, புகார் வந்தாலும் கண்டுகொள்ளக்கூடாது, எனவும், வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கனிம கடத்தலுக்கு யாராவது இடையூறாக செயல்பட்டால், அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. லாரியை மறித்து தகராறு செய்ததாக வழக்கும் பதிந்து விடுகின்றனர்.

டிப்பர் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி, கிராம வழித்தடங்களில் செல்வதற்கு மக்கள் ஆட்சேபம் தெரிவிப்பதால், கோவை மாவட்டம் முழுவதும் உள்ள, 14 பிரதான வழித்தடங்களிலேயே கேரளாவுக்கு கனிமவளத்தை துணிகரமாக கொண்டு செல்கின்றனர்.கனிம வளம் சுரண்டுவதையும், அண்டை மாநிலத்துக்கு அத்துமீறி கொண்டு செல்வதையும், தடுக்க வேண்டிய அதிகாரிகளும் தடுப்பதில்லை. ஆளுங்கட்சியினர் வசூலில் மட்டுமே குறியாக உள்ளனர். 'இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், கோவை மாவட்டத்துக்கு பூகம்ப அபாயமும் அதிகரித்துள்ளதாக' ஆதங்கப்படுகின்றனர், நேர்மையான அதிகாரிகள்.
 

தலைப்புச்செய்திகள்