Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோடீஸ்வரர்கள் தெருக்கோடிக்கு வந்த அவலம்

செப்டம்பர் 07, 2022 11:15

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் கனமழை பெங்களூர் நகர மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. ஏராளமான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

சர்ஜாப்புரா ரோட்டில் சாலையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ரெயின்போ லே-அவுட் அருகே உள்ள ஒரு கிரானைட் கற்கள் விற்பனை கடையில் வெள்ளம் புகுந்ததால் அந்த கடை முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதுபோல பஸ் நிறுத்தமும் தண்ணீரில் மிதக்கிறது. சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அந்த நிறுவனத்தின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தும் இடத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 50 கார்கள் தண்ணீரில் மூழ்கின. இதுபோல சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள கன்ட்ரிசைட் என்ற அடுக்குமாடி குடியிருப்பை சுற்றியும் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால் அந்த குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் மூழ்கியுள்ளன. சர்ஜாப்புரா ரோட்டில் தேங்கி இருந்த மழைநீரில் ஒரு சொகுசு கார் சிக்கி கொண்டது. இதனால் அந்த காரில் வந்தவர்கள் காரை சாலையில் விட்டுவிட்டு சென்று விட்டனர். பெங்களூருவை பொறுத்தவரை கோடீஸ்வரர்களின் உலகம் எனலாம். 150-க்கும் மேற்பட்ட முக்கிய நிறுவனங்களை சேர்ந்த தொழில் அதிபர்கள், கோடீஸ்வரர்கள் ஏராளமானோர் இங்கு உள்ளனர். இந்த பெரும் பணக்காரர்களையும் கன மழை வெள்ளம் அவர்களை சாதாரண மக்களை போல தத்தளிக்கும் நிலைக்கு ஏற்படுத்திவிட்டது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த தொழில் அதிபர்கள் பெரும்பாலோர் படகுகளில் மீட்கப்பட்டனர்.

அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இவர்கள் அறை எடுத்து குடும்பத்தோடு தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் முக்கிய ஓட்டல்கள் 10 முதல் 15 நாட்களுக்கு முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓட்டல்களில் அறைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. ஒரு தொழிலதிபர் ஒரு ஹோட்டலில் நான்கு பேருக்கு ஒரு இரவுக்கு ரூ.42ஆயிரம் கொடுத்து தங்கினார். மழை வெள்ளம் அதிகமாகி உள்ளதால் மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களின் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 5 ஆயிரம் பேரை இவர்கள் மீட்டனர்.

தலைப்புச்செய்திகள்