Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாதயாத்திரையில் ராகுல் அணிந்த டீசர்ட் ரூ.41 ஆயிரம்?

செப்டம்பர் 09, 2022 06:45

புதுடில்லி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரையாக செல்லும் காங்., எம்.பி., ராகுல் அணிந்திருந்த டீசர்ட்டின் விலை ரூ.41 ஆயிரம் என பா.ஜ., விமர்சனம் செய்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், பிரதமர் அணிந்த ரூ.10 லட்சம் மதிப்பு கோட் மற்றும் கூலிங்கிளாஸ் குறித்து பேசுவோமா என பதிலளித்துள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்., எம்.பி., ராகுல் 'பாரத் ஜோடோ யாத்ரா'(இந்திய ஒற்றுமை பயணம்) என்ற நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் மூன்றாவது நாளை எட்டியுள்ளது. இந்த பயணத்தை பா.ஜ., கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், சமுக வலைதளத்தில் பா.ஜ., வெளியிட்ட பதிவில், ' பாரதமே பார் ' என தலைப்பிட்டு, டீசர்ட் அணிந்த ராகுலின் படத்தை வெளியிட்டதுடன், அவர் அணிந்துள்ள டீசர்ட் விலை ரூ.41 ஆயிரம் என காட்டும் படத்தையும் வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், 'பாரத் ஜோடோ யாத்திரை'யில் கூட்டத்தை பார்த்ததும் பயம் வந்துவிட்டதா? முக்கிய விஷயத்தை பற்றி பேசுங்கள். வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத்தை பற்றி பேசுங்கள். ஆடை பற்றி தான் விவாதிக்க வேண்டும் என்றால், பிரதமர் மோடி அணிந்த ரூ.10 லட்சம் மதிப்பு கோட் சூட் மற்றும் ரூ.1.5 லட்சம் மதிப்பு கிளாஸ் பற்றியும் பேச வேண்டும் எனக்கூறியுள்ளது.

தலைப்புச்செய்திகள்