Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை புறக்கணித்து ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

செப்டம்பர் 12, 2022 03:59

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பயிற்சிக்காக பொதுமக்களை அழைத்துச் செல்லாமல் ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு உள்ளிட்ட தாலுக்காக்களை உள்ளடக்கி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இத்தாலுகாக்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மூலமாக ஓட்டுனர் உரிமம், வாகன உரிம புதுப்பிப்பு உள்ளிட்ட சேவைகளை இப்பள்ளிகள் வழங்கி வருகிறது. 

இந்நிலையில் மத்திய அரசின் புதிய போக்குவரத்து நெறிமுறைகளை செயல்படுத்த, தமிழக போக்குவரத்து துறை ஆணையாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் பொதுமக்கள் அவர்களுக்கான சேவையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மற்ற நாட்களில் பொதுமக்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து அவர்களுக்கான சேவையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் வாரத்தில் ஐந்து நாட்கள் பார்க்க வேண்டிய வேலையை இரண்டு நாட்களில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இரண்டு நாட்கள் மட்டும் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் பட்சத்தில், அதில் சேவை குறைபாடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். 

இதனை கருத்தில் கொண்டு வழக்கமாக உள்ள பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று முதல் தமிழக முழுவதும் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு அலுவலகமே வெறிச்சோடி காணப்பட்டது.

தலைப்புச்செய்திகள்