Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவர்களுக்கான ‘சிற்பி’எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்

செப்டம்பர் 14, 2022 03:03

சென்னையில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையிலான சிற்பி என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

சென்னையில் பெருகிவரும் குற்றச்செயல்களைத் தடுக்க மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிறார் குற்றச் செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக் கூடிய சிறுவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும், சென்னையில் 100 மாநகராட்சிப் பள்ளிகளில், தலா 50 மாணவர்களைக் கொண்டு சிற்பி எனும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. பள்ளிகளில் என்சிசி போன்று, காவல் துறையினரின் நிகழ்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 8-ம் வகுப்பு முதல் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கென தனி சீருடை வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இதனைத் தொடர்ந்து, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களுக்கு 3 நாள் பயணமாக முதலமைச்சர் புறப்படுகிறார்.

சென்னையிலிருந்து காலை 11.35 மணிக்கு புறப்படும் முதலமைச்சர், மதுரை சென்று அங்கிருந்து திண்டுக்கல் செல்கிறார். தமிழகத்தில் முதல்முறையாக அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமை  தோட்டானூத்து பகுதியில்  முதலமைச்சர் திறந்துவைக்கிறார். இந்த மறுவாழ்வு முகாமில் 321 தனித்தனி வீடுகள், குடிநீர் வசதி, அங்கன்வாடி மையம், நூலகம், குளியலறை, சமுதாயக் கூடம், பூங்கா, மைதானம், சாலைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழர் முகாமை தொடங்கிவைத்த பின்னர் மதுரை திரும்பும் முதலமைச்சர் அங்குள்ள விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார். மேலும், மதுரையில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை நாளை தொடங்கிவைக்கிறார். பின்னர் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். சிறு, குறு, நடுத்தரத் துறையின் நிகழ்ச்சியில் நாளை மறுதினம் காலை கலந்துகொள்ளும் முதலமைச்சர் பின்னர் சென்னை திரும்புகிறார்.
 

தலைப்புச்செய்திகள்