Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொடர் நடைபயணத்தால் கால்களில் கொப்புளம்- ராகுல்காந்தி நாளை ஓய்வு

செப்டம்பர் 14, 2022 04:36

திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி, காந்தி மண்டபம் முன்பிருந்து கடந்த 7-ந் தேதி அவரது பாதயாத்திரை பயணம் தொடங்கியது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி வழங்கி தொடங்கி வைத்தார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணம் காஷ்மீரில் நிறைவு பெறுகிறது. 

தமிழகத்தில் ராகுலின் நடைபயணம் 4 நாட்கள் நடந்தது. கடந்த 11-ந் தேதி முதல் கேரள மாநிலத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் திருவனந்தபுரம், கணியாபுரத்தில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினார்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. அவர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தொண்டர்களுடன் நடந்தார். அவருக்கு குடை பிடிக்க வந்த உதவியாளர்களை தடுத்து, அதனை தன்னோடு வரும் தொண்டர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். காலை 10.30 மணிக்கு அவர் மாமம் எஸ்.எஸ்.பூஜா கன்வென்சன் சென்டரை சென்றடைந்தார். அங்கு பாதயாத்திரை குழுவினர் ஓய்வெடுத்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் மாமத்தில் இருந்து தொடங்கிய பாதயாத்திரை இரவு 8 மணி அளவில் கல்லம்பலத்தில் நிறைவடைந்தது. அங்கு இரவு தங்கிய ராகுல் காந்தி மற்றும் குழுவினர் இன்று காலை 7.30 மணிக்கு கல்லம்பலத்தில் இருந்து மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினர்.

முதல் நிகழ்ச்சியாக பாதயாத்திரை குழு, சிவகிரி மடத்திற்கு சென்றனர். அங்கு ராகுல்காந்தியை கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவர், சமூக சீர்திருத்த வாதியும், துறவியுமான ஸ்ரீநாரயணகுருவுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த தீபாராதனையிலும் பங்கேற்றார். 

அவருடன் காங்கிரஸ் தொண்டர்களும் ஸ்ரீநாராயணகுருவை வழிபட்டனர். முன்னதாக தனது ஒற்றுமை பயணம் பற்றி ராகுல் காந்தி கூறும்போது, இந்து மதத்தின் பிரதான வார்த்தை ஓம் சாந்தி. ஆனால் இந்துக்களின் காவலன் என்று கூறிகொள்ளும் கட்சி, ஓம் சாந்தி என்ற வார்த்தைக்கு எதிராக நடந்து கொள்கிறது. 

அவர்கள் மதநல்லிணக்கத்தை கெடுக்கிறார்கள். ஒற்றுமையை சீர்குலைக்கிறார்கள். மக்களை பிளவுபடுத்துகிறார்கள். இதனை தடுக்கவும், மக்களை ஒன்றுபடுத்தவுமே நான் ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ளேன் என்றார்.

சிவகிரி மடத்தில் வழிபாடு முடிந்த பின்னர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை மீண்டும் தொடங்கி கொல்லம் மாவட்ட எல்லையான கடம்பாட்டு கோணத்தை சென்றடைந்தது. அங்கு ஓய்வெடுக்கும் ராகுல் காந்தி, மாலை 4 மணிக்கு மீண்டும் பாதயாத்திரையை தொடங்குகிறார். 

கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாதயாத்திரை இன்றுடன் 8-வது நாளை எட்டியுள்ளது. ராகுல் காந்தி 8 நாட்களாக தொடர்ந்து நடந்து வருவதால் அவரது கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, காலில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் எனது ஒற்றுமை பயணம் தொடரும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் ராகுலின் பாதயாத்திரையை ஒருங்கிணைக்கும் குழுவினர் ராகுல் காந்தி நாளை ஓய்வெடுக்க உள்ளதாக கூறியுள்ளனர். இதனை கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் தெரிவித்தனர். 

நாளை ராகுல் காந்தி ஓய்வு எடுப்பதால் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனக்கூறியுள்ளனர். இதனால் நாளை பாதயாத்திரைக்கு ஓய்வு கொடுக்கும் ராகுல் காந்தி நாளை மறுநாள் கொல்லம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.
 

தலைப்புச்செய்திகள்