Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள் காய்ச்சல் தானாகவே ஓடிவிடும் - டாக்டர் தகவல்

செப்டம்பர் 19, 2022 03:23

சென்னை: சென்னையில் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் எங்கு பார்த்தாலும் காய்ச்சலுடன் வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் காய்ச்சல் விட்டு வைக்கவில்லை. பெரியவர்களை கேட்டால் ஒருவாரம் பாடாய்படுத்தி விட்டது.

இன்னும் உடல் வலி சீராகவில்லை என்கிறார்கள். துள்ளித்திரிந்த குழந்தைகள் காய்ச்சலால் ஆஸ்பத்திரி படுக்கைகளில் சோர்ந்து படுத்து கிடப்பதை பார்த்து தாய்மார்களும் சோர்ந்து போய் அருகிலேயே அமர்ந்து இருக்கிறார்கள். டாக்டர்கள் தான் அவர்களை ஆறுதல் படுத்துகிறார்கள்.

இந்த திடீர் பரவல், பரபரப்பு, பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி எழும்பூர் குழந்தைகள் நலத்துறை இயக்குனர் டாக்டர் எழிலரசியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இந்த காய்ச்சல் பற்றி பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. 2018 வரை ஆண்டு தோறும் இந்த கால கட்டத்தில் இப்படித்தான் பரவியது. அதன் பிறகு கொரோனா வைரஸ் பரவலால் கட்டுப்பாடு கடைபிடித்தோம். குழந்தைகளும் வெளியே செல்லாமல் வீடுகளிலேயே இருந்தார்கள்.

இப்போது வெளியே நடமாடுவதால் இந்த காலத்தில் பரவக்கூடிய இந்த சாதாரண வைரஸ் மூலம் காய்ச்சல் ஏற்படுகிறது. 3 முதல் 4 நாட்களில் குணமாகிவிடும். நிறைய பேர் பயணம் காரணமாகவே ஆஸ்பத்திரிகளில் அட்மிட் ஆகி வருகிறார்கள்.

காய்ச்சல் வந்தால் வீடுகளில் இருங்கள். குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாதீர்கள். பொதுவாக வெளியே செல்லும் போது மாஸ்க் அணியுங்கள். கூட்டமான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்லாதீர்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.

சளி, காய்ச்சல், இருமல் என்றால் டாக்டர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை வாங்கி சாப்பிட கூடாது. பீதி வேண்டியதில்லை. கவனம் போதும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்