Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாஷா அமினியின் காயங்களை வெளியிட்ட பத்திரிகையாளர் கைது

செப்டம்பர் 29, 2022 08:18

தெஹ்ரான்: ஈரானில் மாஷா அமினியின் காயங்களை பதிவு செய்து வெளியிட்ட பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.கடந்த 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார்.
அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது.
முன்னதாக மாரடைப்பு காரணமாக மாஷா அமினி இறந்ததாகவும் அவரை போலீஸார் தாக்கவில்லை என்றும் ஈரான் அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் பத்திரிகையாளர் நிலோஃபர் ஹமிதி, மாஷா அமினியின் உடலில் ஏற்பட்ட காயங்களை பத்திரிகையில் வெளியிட்டார். இதுவே ஈரானில் போராட்டம் வெடிக்க முக்கியக் காரணமாக இருந்தது. இந்த நிலையில் மாஷா அமினியின் காயங்களை வெளியிட்ட, பத்திரிகையாளர் நிலோஃபர் ஹமிதி கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த கைது நடவடிக்கை ஈரானில் பதற்றத்தை எற்படுத்தியுள்ளது. ஈரான் போராட்டத்தில் இதுவரை 70-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.  பத்து நாட்களுக்கு மேலாக ஈரானில் போராட்டம் தொடர்ந்து வருகின்றது.

தலைப்புச்செய்திகள்