Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு மறு ஆய்வு செய்த மனு தள்ளுபடி

அக்டோபர் 18, 2022 12:13

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.

அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மத நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை சம்பந்தப்பட்டுள்ளதால் மறு ஆய்வு கோர உரிமை உள்ளதாக வாதிட்டிருந்தார்.  மேலும், அணிவகுப்புக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சனை எனவும், அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும் எனவும், மாறாக குற்றவியல் வழக்காக விசாரிக்க உகந்ததல்ல எனவும், அதனால் அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் திருமாவளவன் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் கண்காணிப்பாளரையோ, காவல் ஆணையரையோ எதிர்மனுதாரராக  சேர்ப்பதால் மட்டும் உரிமையியல் வழக்கை, குற்றவியல் வழக்காக கருத முடியாது எனவும் வாதிடப்பட்டது.  இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி இளந்திரையன் , விசிக தலைவர்  திருமாவளவன் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.  இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், கடந்த செப்டம்பர்  மாதம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்து, திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

தலைப்புச்செய்திகள்