Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் இன்று 3,537 பேருந்துகள் இயக்கப்படுகிறது

அக்டோபர் 21, 2022 12:46

சென்னை: தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் தங்கியுள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர். பள்ளி, கல்லூரிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் நாளை முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறையாகும். அதனால் இன்று மாலையில் இருந்து வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் வெளியூர் செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

6 பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு போலீசாருடன் போக்குவரத்து கழக அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர். சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நெரிசல் இல்லாமல் பஸ்கள் புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு இல்லாமல் நேரடையாக பயணம் செய்யவும் கூடுதலாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. 

இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,437 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 3,537 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாலையில் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க தொடங்கும். இரவு நேர பயணத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்குவார்கள். பொதுமக்கள் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று 10 சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டது. அங்கு சென்று உடனடி பயணத்திற்கு முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பஸ்கள் புறப்பட்டு செல்வதால் நள்ளிரவு வரை கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

பொதுமக்களுக்கு உதவ ஒவ்வொரு பஸ் நிலையங்களிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. மேலும் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்த பயணிகள் குறிப்பிட்ட பஸ் நிலையங்களுக்கு முன்னதாக வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றை விட நாளை மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் 3,686 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்