Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொடரும் கனமழையினால் ஈரோட்டில் பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது

அக்டோபர் 21, 2022 12:49

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள், நீர்நிலைகள், குளம், குட்டை, ஏரிகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக சத்தியமங்கலம், அந்தியூர், தாளவாடி, அம்மாபேட்டை, கொடுமுடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் இந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. 

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக மீண்டும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.
ஈரோடு மாநகர பகுதியில் நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஈரோடு சென்னிமலை ரோடு சேனாதிபதி பாளையம், தொட்டிபாளையம் பிரிவு பகுதிகளில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக அந்தப் பகுதியில் செல்லும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியே செல்ல முடியாமல் சேனாதிபதி பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

 இதேபோல் அந்த பகுதியில் உள்ள ஏரியில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீரும் ஊருக்குள் புகுந்தது. இதனால் சேனாதிபாளையம் பகுதியில் உள்ள சுமார் 75-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். நள்ளிரவு நேரம் தண்ணீர் அதிகரித்து வந்ததால் மக்கள் தங்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு, தீயணைப்பு வீரர்கள் சேனாதிபதி பாளையம் பகுதிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களை பத்திரமாக வெளியேற உதவி செய்தனர். 

75 வீடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள மேடான பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு பள்ளியில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விடிய விடிய அவதி அடைந்தனர். மேலும் தொட்டிபாளையம், பெரிய சடையம்பாளையம் பகுதிகளிலும் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் அப்பகுதி மக்களும் கடும் அவதி அடைந்தனர். வீடுகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மூழ்கியது. கிராம பகுதி அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 

பல கிலோமீட்டர் சுற்றி மீண்டும் நகருக்குள் வந்தனர். இதேப்போல் கொடுமுடி, நம்பியூர் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் அந்த பகுதியிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது. சத்தியமங்கலம், தாளவாடி, கோபி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, கொடிவேரி, குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. ஏற்கனவே குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. பெரும்பள்ளம் அணை முழு கொள்ளளவை நெருங்கிவிட்டது.
 

தலைப்புச்செய்திகள்