Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புயலின் காரணமாக தாமதமாக தொடங்கும் வடகிழக்கு பருவமழை

அக்டோபர் 21, 2022 02:40

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:- தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20-ந்தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

அதற்கு ஏற்ப கிழக்கு திசை காற்றும் வீசத் தொடங்கியது. அடுத்த சில தினங்களில் பருவமழை தொடங்க வாய்ப்பு இருந்த நிலையில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக வலுப்பெற்று வருகிற 25-ந்தேதி கடற்கரையை நெருங்கும். இந்த புயல் காரணமாக காற்று வீசும் திசை முற்றிலும் மாறிவிடும். தமிழகத்தை ஒட்டிய கடல்பரப்பு ஈரப்பதம் அனைத்தையும் உறிந்து விடும். அதன்பிறகு இயல்பு நிலை திரும்பிய பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்க மேலும் சில நாட்கள் ஆகும்.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விலகி இருக்க வேண்டும். கிழக்கு திசை காற்று ஈரப்பதத்துடன் வீச வேண்டும். தமிழகத்தில் சில தினங்களுக்கு பரவலாக மழை பெய்திருக்க வேண்டும். இந்த அளவுகோல்களின் அடிப்படையில் தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்படுகிறது. எனவே புயல் செயல் இழந்து சில நாட்களுக்கு பிறகே பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. 

எனவே பருவமழை தாமதமாக தொடங்குகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 25-ந்தேதி பருவமழை தொடங்கியது. 2020-ம் ஆண்டு அக்டோபர் 28-ந்தேதியும், 2018-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதியும், 2016-ம் ஆண்டு அக்டோபர் 30-ந்தேதியும் தாமதமாக பருவமழை தொடங்கியது. அதே நேரத்தில் 2019-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி, 2014-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி என முன்னதாகவே பருவமழை தொடங்கியது. இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்