Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெயர்-கொடியை பயன்படுத்துவதா?: ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க. நோட்டீஸ்

டிசம்பர் 22, 2022 04:52

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கட்சி பெயர் மற்றும் கொடியை அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தினர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது முகவரி மற்றும் பெரிய குளத்தில் அவரது நிரந்தர முகவரி ஆகியவற்றுக்கு அனுப்பப் பட்டுள்ள வக்கீல் நோட்டீஸ் குறிப்பிட்டிருப்பதாவது:- அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார்.

ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அ.தி.மு.க. அலுவலகம் இயங்கி வருகிறது.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள நீங்கள் (ஓ.பன்னீர்செல்வம்) ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்று குறிப்பிட்டு கட்சியின் 'லெட்டர்பேட்'டை மோசடியாக பயன்படுத்தி உள்ளீர்கள். அ.தி.மு.க. தலைமையகத்தின் முத்திரையையும் போலியாக உருவாக்கி பயன்படுத்தி உள்ளீர்கள். இப்படி செயல்பட்டுள்ளது முழுக்க முழுக்க குற்றச் செயலாகும். தண்டனைக்குரியதுமாகும். அதே நேரத்தில் பொதுமக்களையும் தவறாக வழி நடத்தியுள்ளீர்கள்.

அ.தி.மு.க. அலுவலகம், கட்சி முத்திரை உள்ளிட்டவற்றின் சட்டப்பூர்வ உரிமை இடைக்கால பொதுச் செயலாளரிடமே உள்ளது. கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவு இதனை உறுதிப்படுத்துகிறது. எனவே அ.தி.மு.க. பெயரை பயன்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.

எனவே கட்சி பெயரை பயன்படுத்து வதை நிறுத்திக் கொள்ளுங்கள். நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டுள்ள உங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்