Monday, 8th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நபார்டு வங்கியின் கடன் திட்ட அறிக்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

டிசம்பர் 22, 2022 07:52

நாமக்கல், டிச.23- நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்,
2023-2024 ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங் வெளியிட்டார். 

மாவட்ட ஆட்சித்தலைவர் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசும் போது :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி)
நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன்
மூலம் ரூ. 11,273.68 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது.

இது 2022-23 ஆண்டை விட 44.16 % அதிகம் என்பது குறிப்பிடதக்கது. விவசாயத்தில் நீண்ட கால கடன் அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை இத்திட்டம் விளக்குவதாக குறிப்பிட்டார். அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திற்கு 2023-24 ஆம் ஆண்டுக்கு, பயிர் கடன் ரூ. 4961.95 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ.1238.07 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ.115.34 கோடி, விவசாய இதர கடன்கள் ரூ.136.90 கோடி என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடு ரூ.6452.27 கோடி மற்றும் சிறு,
குறு நடுத்தர தொழில் கடன் ரூ.3657.75 கோடி, ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு
வசதிக்கான கடன் ரூ.294.79 கோடி, அடிப்படை கட்டுமான வசதி ரூ.66.00 கோடி, சுய
உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் அளவு ரூ.757.80 கோடி என
மொத்தம் ரூ. 11,273.68 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதென மதிப்பீடு செய்து,
கடன் திட்ட அறிக்கையினை வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் இது போன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான
வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும்.
வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை
பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல்,
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும்.

வங்கிகள்  இதுபோன்ற  முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார். இக்கூட்டத்தில்  மாவட்ட வளர்ச்சி மேலாளர் நபார்டு வங்கி ரமேஷ், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்