Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

65-வது பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மே 13, 2019 05:33

சென்னை: தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று 65-வது வயது பிறந்தது. ஆனால் சட்டசபை இடைத்தேர்தல் பிரசார பணிகளில் கவனம் செலுத்தி வருவதால், அவர் இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பிற மாநில தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். நேற்று காலை தொலைபேசி மூலம் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்துகள் கூறிய பிரதமருக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். மேலும் தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது. தங்களது பிறந்தநாளையொட்டி எனது இதயபூர்வமான வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மகிழ்ச்சியையும், நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வழங்கிட வேண்டுகிறேன். உங்களின் சேவை இந்த நாட்டுக்கு இன்னும் பல ஆண்டுகள் நீடிக்கட்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில், ‘எனது பிறந்தநாளையொட்டி உங்கள் வாழ்த்துகளுக்கும், நீங்கள் அனுப்பிய பூக்களுக்கும் மிக்க நன்றி’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது.

சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி மறைந்த ஜெயலலிதா வழியில் சாமானிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி ஏழை-எளிய மக்களின் கனவுகளை நனவாக்கி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் உடல்நலத்துடன் மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த தேர்தல் வெற்றியோடு இன்னும் பல வெற்றிகளை பெற்று மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அனுப்பிய கடிதத்தில், “அ.தி.மு.க.வின் செயல்பாட்டிலும், மக்கள் பணியிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு செயல்பட்டு வருவதால் இன்றைக்கு முதல்-அமைச்சர் பொறுப்பில் செயல்படக்கூடிய திறமை பெற்றவராக இருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்குரியது. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்கும் தங்கள் தலைமையில் நடைபெற்று வரும் உயர்வான பணிகள் மேலும் சிறக்க, வளர, தொடர உங்களது பிறந்தநாளில் மனதார வாழ்த்துகிறேன். தாங்கள் நல்ல உடல்நலத்துடன் நீடூழி வாழ இயற்கையும், இறைவனும் துணை நிற்க வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்