Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொட்டல் கிராமத்தில், மின்சாரம் தாக்கி ஆண்யானை பரிதாபமாக உயிரிழப்பு!

டிசம்பர் 26, 2022 01:40

திருநெல்வேலி,டிச.26:  திருநெல்வேலி புறநகர் மாவட்டம், சேரன்மகாதேவியை அடுத்துள்ள, கல்லிடைக்குறிச்சி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்தின், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை யொட்டி அமைந்திருக்கும் மிகசிறிய கிராமம் பொட்டல் ஆகும். விவசாயிகளும், விவசாய கூலித் தொழிலாளிகளும், அதிக அளவில் வாழ்ந்து வரும் இந்த கிராமத்திற்கு,  உணவுக்காக வனவிலங்குகள், வனப்பகுதிகளில் இருந்து, அடிக்கடி கீழே இறங்கி வருவது வழக்கம். அது போலவே, இன்று (டிசம்பர்.26) திங்கட்கிழமை அதிகாலையில், 5 மணிக்கு  மேல், வனப்பகுதியை சேர்ந்த  ஆண் யானை ஒன்று உணவு தேடி, கீழே இறங்கி, பொட்டல் கிராமத்துக்கு வந்தது. தற்போது  குளிர் காலம் என்பதால், பனைமரத்தில் காய்த்து, பழுத்த நிலையில் தொங்கிய பனம்பழங்களின் வாசனையை முகர்ந்த அந்த  யானை, பனம்பழங்களை உண்ணும் ஆசையில், அவற்றை பறிப்பதற்காக, பனை மரத்தை வேரோடு சாய்ப்பதற்கு முயிற்சித்தது. அப்போது எதிர்பாராத விதமாக, பனை மரம் அருகேயுள்ள  மின்சார கம்பியானது, பனைமரத்தில் உரசியது.   
அவ்வாறு உரசிய மின்சாரம், பனை மரத்தை பிடித்துக்கொண்டிருந்த யானை மீது  தாக்கி,  சம்பவ இடத்திலேயே ஆண் பரிதாபமாக உயிரிழந்தது. யானை இறந்த தகவல் குறித்து, பொட்டல்  கிராமமக்கள், அம்பாசமுத்திரம் வனத்துறைக்கு தகவல்  தெரிவித்தனர். அதனை தொடர்ந்து,  சம்பவ இடத்திற்கு, கல்லிடைக்குறிச்சி போலீசாருடன் இணைந்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து, வனத்துறையினரும்,  காவல் துறையினரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பொட்டல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில், மின்விநியோகம் முற்றிலுமாக தடைப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்