Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் மாடுபிடி வீரர்கள்- காளைகளை அடக்க தீவிர பயிற்சி

டிசம்பர் 26, 2022 02:04

தமிழர்களின் வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படும் போட்டி ஜல்லிக்கட்டு. பொங்கல் பண்டிகை நேரத்தில் நடத்தப்படும் இந்த போட்டியில் இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடந்த போதிலும் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் வளர்க்கப்படும் காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்து பங்கேற்க செய்வார்கள்.
களத்தில் திமிறிக்கொண்டு ஓடும் காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டு அடக்குவார்கள். போட்டியில் காளைகளை அடக்கக்கூடிய இளைஞர்களுக்கும், வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் சேர், கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், சைக்கிள், மோட்டார் சைக்கிள், தங்க காசு என தொடங்கி பம்பர் பரிசாக கார் வரை வழங்கப்படுகிறது. 
இதனால் காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்க வரும் வீரர்களுக்கும் களத்தில் கடும் போட்டி நிலவும். அனல் பறக்கும் வகையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருவது மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருவார்கள். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகள் களை கட்டும். இப்படிப்பட்ட ஜல்லிக்கட்டு கொரோனா பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நடத்த முடியாமல் போனது. ஆனால் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடத்தப்பட்டது. ஆனால் வீரர்கள் மற்றும் காளைகள் பங்கேற்பு, பார்வையாளர்கள் பங்கேற்பு என அனைத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 
இதனால் குறைவான அளவிலேயே காளைகள், வீரர்கள், பார்வையாளர்கள் பங்கேற்க முடிந்தது. இருந்தபோதிலும் வழக்கமான உற்சாகத்துடனே கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுக்கு மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஜனவரி மாத தொடக்கத்தில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என்று தமிழக அரசு வாதாடி வருகிறது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மாடுபிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் நீச்சல், ஓட்டம், மண் குத்துதல், ஆரஞ்சு-எலுமிச்சம்பழம் போன்ற பழங்களை தரையில் உருட்டிவிட்டு அதனை கொம்பால் குத்த செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். அதேபோன்று ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை திருப்பாலை பகுதியில் முடக்கத்தான் மணி என்ற மாடுபிடி வீரரின் தலைமையில் ஏராளமான வீரர்கள் காளைகளை அடக்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வாடிவாசலில் இருந்து பாய்ந்து வரும் காளையை எவ்வாறு பிடிப்பது? காளைகளை எப்படி அடக்க வேண்டும்? போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக ஒரு மைதானத்தில் வாடிவாசல் போன்று செயற்கையாக அமைத்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 
50-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இதே போல் மதுரை மாவட்டத்தில் பல இடங்களிலும் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு மற்றும் பல்வேறு இடங்களில் காலை-மாலை நேரங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் சாலைகளில் ஓட்டப்பயிற்சி அளிக்கப்படுவதையும், வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.

தலைப்புச்செய்திகள்