Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை: ஓ.பி.எஸ்.சை சட்ட ரீதியாக ஓரம் கட்ட திட்டம்

டிசம்பர் 27, 2022 11:52

சென்னை: அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் ஏற்பட்ட விரிசலில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். கட்சியின் பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 

ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று தொடர்ந்து கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதி நடைபெறுகிறது.
தீர்ப்பு சாதகமாக வருகிறதா? இல்லையா? என்பதை பொறுத்து அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். 

அதன்படி ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.50 மணியளவில் தொடங்கியது. கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை வழிநெடுக அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர். 

அவர் தலைமை கழகத்தை வந்து அடைந்ததும் மூத்த நிர்வாகிகள் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர். கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், தலைமை கழக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பா.வளர்மதி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
மேலும் சென்னை மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, கே.பி.கந்தன், விருகை வி.என்.ரவி, ஆதி ராஜாராம், ராஜேஷ், வெங்கடேஷ்பாபு உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர். 

ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி கூட்டத்தில் விவாதித்தனர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தை அங்கீகரித்து தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை தங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கருதுகின்றனர். 

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தியதை கண்டித்து பழனிசாமி நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் பதில் அளித்தார். இதன் அடிப்படையில் சட்ட ரீதியாக அணுகி ஓ.பன்னீர் செல்வத்தை முற்றிலுமாக ஓரம் கட்டி விட முடிவு செய்தனர். 

சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்களுக்கும் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கும் இடையே பிணைப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனாலேயே சிலர் வெளியேறி ஓ.பன்னீர்செல்வம் அணியில் பதவிகள் பெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட செயலாளர்கள் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அனுசரித்து செல்ல கேட்டுக்கொண்டனர். 

அடுத்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் வருகிற 9-ந்தேதி நடைபெறுகிறது. சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கையில் மாற்றம் கிடையாது என்று சபாநாயகர் அறிவித்து விட்டார். இந்த பிரச்சினையில் எம்.எல்.ஏ.க்களின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. 

கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் காரில் சென்ற வேட்பாளரை வழிமறித்து கடத்தி சென்ற விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விஜயபாஸ்கர் மீது வழக்கு போட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இந்த பிரச்சினைகளை கண்டித்து எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. 2024 பாராளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வரும் என்று சமீபத்தில் சி.வி.சண்முகம் கூறிய கருத்து கட்சிக்குள் சர்ச்சையானது. மேலும் அ.தி.மு.க. ஒன்று பட வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பிடிக்கவில்லை. 

எனவே தேர்தல் கூட்டணியில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்படுகிறது. அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டை சிறப்பாக நடத்துவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்