Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அட்டையை பொது சேவை மையம் மூலம் வழங்கும் பணியை சூரங்குடியில் தொடங்கி வைத்த ஊராட்சி மன்ற தலைவர்

டிசம்பர் 28, 2022 03:10

திருநெல்வேலி : தென்காசி.மாவட்டத்தில்,2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு பெறும் வசதியுடைய, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அட்டையை,  பொது சேவை மையம் மூலம் வழங்கும் பணியை, சூரங்குடியில் தொடங்கி வைத்த ஊராட்சி மன்ற தலைவர்!

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சி சூரங்குடியில், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அட்டையை, பொது சேவை மையம்  மூலம் வழங்கும் பணியை, ஊராட்சி மன்ற தலைவர் முனைவர்  எஸ். சிவஆனந்த் தொடங்கிவைத்தார்.

சிறுகுறு விவசாயிகள், விவசாயக்கூலிகள், மகளிர் குழு உறுப்பினர்கள், கட்டுமான தொழிலாளர்கள், உள்ளூர் கூலி தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள், தூய்மை பணியாளர்கள் உட்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவுசெய்து, இந்த அடையாள அட்டையை பெற முடியும்.


பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த திட்டத்தின் மூலம், அட்டை பெறும் பயனாளிக்கு 2 லட்சம் ரூபாய் மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு கிடைக்கும்.


கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 2020ஆம் ஆண்டு அப்போது இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா ஊரடங்கு நேரத்தில், அமைப்புசாரா நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு,  2 ஆயிரம் ரூபாய்  நிவாரண உதவியும், சிறப்பு உணவுத் தொகுப்பும் வழங்கினார்.

அத்துடன் 2021- ஆம் ஆண்டு,  ஜனவரியில் ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி, துண்டு ஆகியவற்றையும், பெண் தொழிலாளர்களுக்கு புடவையும், அத்துடன் பச்சரிசி, சிறுபருப்பு, எண்ணெய், நெய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பினையும் வழங்கினார்.

அது போல, இனிவரும் காலங்களில் அரசின் மூலம் வழங்கப்படும், பல சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயன்களை பெற, இந்த அடையாள அட்டையை அமைப்புசாரா தொழிலாளர்கள் பெற்றுக்கொள்வது அவசியம் ஆகும். அதன் காரணமாக, தனது ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும், சிறப்பு முகாம்கள்  நடத்தப்பட்டு அட்டைகள் பதிவு செய்யப்படுகின்றன! என்று, ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.


அத்துடன், வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு பெறும் வசதியுடைய ஆயுஷ்மான் பாரத் அடையாள அட்டை பெறுவதற்கும் பதிவு செய்யப்பட்டது.
மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள், இந்த முகாமினை நேரில் பார்வையிட்டு, பாராட்டு தெரிவித்தார். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமோதரன்,  பதியப்பட்ட பயனாளிகளுக்கு அமைப்புசாரா தொழிலாளர் அடையாள அட்டையை,  ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் வழங்கினார்.


ஊராட்சி வார்டு உறுப்பினர் கண்ணன் என்ற பேச்சிமுத்து, ஊராட்சி செயலர் மாரித்துரை, பணித்தள பொறுப்பாளர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்