Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

100 படுக்கை வசதியுடன் மகப்பேறு மருத்துவமனை கட்டிடம்: திருவாரூர் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

டிசம்பர் 28, 2022 04:30

திருவாரூர்:  திருவாரூர் பழைய அரசு  மருத்துவமனை கட்டிடத்தை இடித்து விட்டு 100 படுக்கை வசதியுடன் கூடிய மகப்பேறு  மருத்துவமனை கட்ட வேண்டும் என பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார். சுகாதார பேரவை கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்டஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, சுகாதார மறுசீரமைப்பு திட்ட துணை இயக்குனர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், 'திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி     மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு  மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், புதிய  மருத்துவமனை கட்டிடங்கள் தொடர்பாக 204 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் 48 கோரிக்கைகளுக்கு வட்டார அளவிலும், 143 கோரிக்கைளுக்கு மாவட்ட அளவிலும் உள்ள நிதியின் மூலமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 13 கோரிக்கைகளுக்கு மாநில நிதி மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்' என்றார்.   கூட்டத்தில் திருவாரூர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், 'திருவாரூரில் உள்ள பழைய அரசு  மருத்துவமனை கட்டிடம் பயன்பாட்டில் இல்லை. இதை இடித்து அகற்றிவிட்டு 100 படுக்கை வசதியுடன் புதிய மகப்பேறு மருத்துவமனை கட்ட வேண்டும். விஜயபுரம் மகப்பேறு  மருத்துவமனையை நவீன வசதிகளுடன் விரிவுபடுத்த வேண்டும். மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும்' என்றார்.

கண்காட்சி கூட்டத்தையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மலேரியா காய்ச்சல், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், இன்புளூயன்சா, யானைக்கால் நோய், எச்.ஐ.வி., முதல்-அமைச்சரின் விரிவான மருத்து காப்பீட்டுத்திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் தொடர்பாக கண்காட்சி அமைக்கப் பட்டிருந்தது. நிகழ்ச்சியில் சுகாதார துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்