Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.25 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் இடிப்பு

டிசம்பர் 30, 2022 05:05

திருப்பூர்:  திருப்பூர் மாநகரில் ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கட்டிடங்களை போலீசார் அதிரடியாக இடித்து அகற்றினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் படி ஆகியோர் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.

திருப்பூர் ஜம்மனை ஓடை பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள், பனியன் நிறுவனங்கள், சாயஆலை, தங்கும் விடுதிகள், இரும்பு குடோன் என 26 கட்டிடங்கள் இருந்தன. இந்த கட்டிடத்தில் இருந்தவர்களிடம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக காலி செய்யும்படி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

உரிய காலக்கெடுவுக்கு பிறகும் கட்டிடங்களை காலி செய்யாமல் இருந்தனர்.  
இதைத்தொடர்ந்து நேற்று காலை உதவி கமிஷனர் செல்வநாயகம், உதவி பொறியாளர் கோவிந்தபிரபாகர், திருப்பூர் வடக்கு தாசில்தார் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. பொக்லீன் எந்திரங்கள் மூலமாக கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.

அப்பகுதியில் உள்ள கட்டிட உரிமையாளர்கள், நீர்வழிப்புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களை விரிவாக்கம் செய்திருந்தனர். அந்த பகுதிகளை மட்டும் அதிகாரிகள் அகற்றினார்கள். சம்பந்தப்பட்ட கட்டிடங்களில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேறினார்கள். பொருட்கள், சாமான்களை அகற்றினார்கள்.

நேற்று 5 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம் ரூ.25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கும் பணி நடக்கிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தலைப்புச்செய்திகள்