Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஸ் சிலிண்டர் திருடனை பிடிக்க சென்ற இன்ஸ்பெக்டருக்கு அடி,உதை, 2 போலீசாருக்கு கத்திக்குத்து

டிசம்பர் 30, 2022 05:11

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே காஸ் சிலிண்டர் திருடனை பிடிக்க சென்ற இன்ஸ்பெக்டரை தாக்கி, 2 போலீசாரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டை சேர்ந்தவர் செல்லத்துரை(45). விவசாய தொழிலாளியான இவர் கடந்த மார்ச் மாதம் கோடியக்கரையில் உள்ள நூர் முகமது என்பவரது வீட்டில் சிலிண்டர் திருடியதாக புகார் எழுந்தது.

இதைதொடர்ந்து செல்லத்துரையை பிடிப்பதற்காக 2 முறை போலீசார் சென்றனர். ஆனால் போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்ததால் செல்லத்துரை அங்கிருந்து தப்பி சென்றார்.இந்நிலையில் கோடியக்காட்டில் செல்லத்துரை இருப்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோடியக்காட்டில் உள்ள செல்லத்துரை வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் குணசேகரன், காவலர்கள் ராஜ் அய்யப்பன், சக்திவேல் ஆகியோர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்றனர்.

போலீசார் வருவதை அறிந்ததும் செல்லத்துரை, அவரது மனைவி ராணி(40), மகன் வீரக்குமார்(25), மகள் கலிப்பிரியா(20) மற்றும் செல்லத்துரையின் தாய் பார்வதி(70) ஆகியோர் வீட்டுக்கு வெளியே வந்து போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினர். மேலும் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களை கட்டை, கற்களால் 5 பேரும் தாக்கினர். காய்கறி வெட்டுவதற்கு பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்து போலீசாரை செல்லத்துரை தாக்க முயன்றார்.

அப்போது அதை தடுக்க முயன்ற ராஜ் அய்யப்பன், சக்திவேலுக்கு லேசான கத்தி கீறல் ஏற்பட்டது. கட்டையால் தாக்கியதில் இன்ஸ்பெக்டர் குணசேகரனின் வலது கை மூட்டு இறங்கியது. மேலும் கட்டை, கற்களால் தாக்கியதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். இதேபோல் தள்ளுமுள்ளுவில் பார்வதியும் காயமடைந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் குணசேகரன் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

லேசான காயமடைந்த காவலர்கள் ராஜ் அய்யப்பன், சக்திவேல் மற்றும் செல்லத்துரை தாய் பார்வதி ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த தகவல் அறிந்ததும் கோடியக்காடு பகுதிக்கு நாகை எஸ்பி ஜவஹர் மற்றும் அதிவிரைவு படையினர் சென்றனர். பின்னர் கோடியக்காடு பகுதியில் பதுங்கியிருந்த செல்லத்துரை, மகன் வீரக்குமார், மகள் கலிப்பிரியா ஆகியோரை பிடித்து வேதாரண்யம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ராணியை தேடி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்