Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்துக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி!

ஜனவரி 30, 2023 07:16

திருநெல்வேலி சந்திப்பு, ம.தி.தா.    இந்துக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியில், 3 நாட்கள் அறிவியல் கண்காட்சி! லோகோ வெளியீட்டு விழாவில்,பள்ளிச்  செயலாளர் செல்லையா தகவல்!

திருநெல்வேலி :- இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான "தேசிய கவி" சுப்பிரமணிய பாரதி,  "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சி.சிதம்பரனார் போன்ற பெருமக்கள் பயின்ற பெருமைமிக்க, திருநெல்வேலி சந்திப்பு, ம.தி.தா. இந்துக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் வரும் பிப்ரவரி 6, 7, மற்றும் 8 ஆகிய, 3 தேதிகளில் (திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில்)"புதுமை அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி -2023"- என்னும் பெயரிலான, மெகா "அறிவியல் கண்காட்சி" நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாநகர மற்றும்   மாவட்டத்தின்  பல்வேறு ஊர்களில் இருந்து, பல்வேறு பள்ளிகளில் பயிலுகின்ற,  திரளான மாணவ, மாணவியர்கள், திரண்டு வந்து, இந்த மெகா கண்காட்சியை காண இருக்கின்றனர்.  கண்காட்சி துவங்க இருப்பதை,  முன்னிட்டு, இப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள, "வ. உ. சி. கூட்ட அரங்கம்" கட்டிடத்தில் வைத்து, இன்று (ஜனவரி.30) காலையில், லட்சினை (லோகோ)  வெளியிடும் நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக,  பள்ளி தலைமையாசிரியர் சி.உலகநாதன், அனைவரையும் வரவேற்று, பேசினார்.

பள்ளிச் செயலாளர்  எம்.செல்லையா தலைமையுரை நிகழ்த்தி, லட்சினையை (லோகோவை) வெளியிட்டார்.நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள, ஒன்றிய  அரசின், மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எஸ்.முத்துக்குமார்,  லட்சினையை பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அவர் சிறப்புரை நிகழ்த்தினார்.  அப்போது அவர்,  "மாணவ, மாணவியர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு, மத்திய- மாநில அரசுகள், உதவி செய்வதற்கு தயாராக உள்ளன.

புதிய கண்டுபிடிப்புகள் மூலம், நமது  இந்திய திருநாட்டின் பெருமையை, உலகிற்கு கொண்டு செல்லக்கூடிய வகையில், பள்ளி மாணவ, மாணவியர்களாகிய நீங்கள், உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்.  உலக அரங்கில், நம்முடைய  தாய்த்திருநாடான இந்தியா,  அறிவியல் கண்டுபிடிப்புகளில்,   "முதல் இடம்" வகிக்க வேண்டும்.  அதற்கு இது போன்ற, புதுமை அறிவியல் கண்காட்சிகள், பெரிதும் உதவும்.  உங்கள், ம.தி.தா. இந்துக்கல்லூரி பள்ளியின், முன்னாள் மாணவரான,  "பாட்டுக்கொரு புலவன்" பாரதியின், "அறிவியல் ஆயிரம் செய்வோம்!" என்னும் கூற்றை, நீங்கள் உண்மையாக்கி காட்ட வேண்டும்!  அதற்கேற்ப, சிறப்பாக செயல்பட வேண்டும்!" என்று, கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், கல்விச்சங்க ஆட்சி மன்ற குழு உறுப்பினர்    ஏ.எல்.எஸ்.சண்முகம், பேட்டை ம.தி.தா.     இந்துக்கல்லூரி முதல்வர்  "முனைவர்" ஏ. சுப்பிரமணியன், பள்ளியின் அலுவலக மேலாளர்  எஸ்.சட்டநாதன்  மற்றும்  ஆசிரியப்பெருமக்கள், மாணவ-மாணவியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள், கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில், பள்ளியின் உதவித்தலைமை ஆசிரியை பி. பகவதி, வந்திருந்த அனைவருக்கும் நன்றி  கூறினார்.

தலைப்புச்செய்திகள்