Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10-ந்தேதி திருப்பூர் கூட்டத்தில் மோடி, எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை?

பிப்ரவரி 08, 2019 08:30

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே கூட்டணி உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமனை இது தொடர்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் டெல்லி சென்று 2 தடவை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியானது. 

முதலில் யார் தலைமையில் கூட்டணி உருவாகும் என்பதில் இழுபறி ஏற்பட்டது. பிறகு அ.தி.மு.க. தலைமையில் கூட்டணியை ஏற்படுத்த பா.ஜனதா தலைவர்கள் சம்மதித்தனர். இதைத் தொடர்ந்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்களை பிரித்துக் கொள்வது என்ற பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இன்னமும் ஒருமித்த கருத்து ஏற்டவில்லை. இதற்கு பா.ஜனதாவின் பிடிவாதமான அணுகு முறைதான் காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சில தொகுதிகளை பா.ஜனதா தலைவர்கள் தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியபடி உள்ளனர். அதை ஏற்க அ.தி.மு.க. தயக்கத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது. 

கொங்கு மண்டலம் எப்போதுமே அ.தி.மு.க. கோட்டையாகத் திகழும் பகுதியாகும். கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க. ஆட்சி அமைவதற்கு கொங்கு மண்டலத்தில் கிடைத்த அபரிதமான வெற்றியே காரணமாகும். இது குறித்த புள்ளி விவரத்தை நன்கு உணர்ந்துள்ள மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கொங்கு மண்டலத்தில் உள்ள வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை குறி வைத்து கேட்கிறார். 

கோவை பாராளுமன்ற தொகுதியை வானதி சீனிவாசனுக்கும், திருப்பூர் தொகுதியை சி.பி.ராதாகிருஷ்ணனுக்கும், ஈரோடு தொகுதியை பாரிவேந்தருக்கும் வேலூர் தொகுதியை ஏ.சி.சண்முகத்துக்கும் பாரதிய ஜனதா சார்பில் கேட்கப்படுகிறது. மேலும் சிவகங்கை தொகுதியை தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கும், கன்னியாகுமரி தொகுதியை பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் தென்சென்னை தொகுதியை பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் பா.ஜனதா தரப்பில் வலியுறுத்தி கேட்கப்படுகிறது. 

பா.ஜனதா கேட்கும் தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதி மட்டுமே பா.ஜனதாவுக்கு உறுதியாகி உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, தென்சென்னை, சிவகங்கை ஆகிய தொகுதிகளை விட்டுத்தர இயலாது என்று அ.தி.மு.க. தலைவர்கள் தொடர்ந்து கூறியபடி உள்ளனர். 

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் தென்சென்னை தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும், 27 வயதே ஆன டாக்டரான ஜெயவர்தன் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை வீழ்த்தினார். கடந்த 5 ஆண்டுகளில் தென் சென்னை தொகுதிக்கு பல நலத்திட்டங்களை ஜெயவர்த்தன் எம்.பி. கொண்டு வந்துள்ளார். எனவே மீண்டும் அவர் போட்டியிட விரும்புவதால் அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. மறுத்து வருகிறது. இத்தகைய காரணங்களால் அ.தி.மு.க. - பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்தப்படி உள்ளது. 

இந்த நிலையில் அ.தி. மு.க. - பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை வரும் ஞாயிற்றுக்கிழமை (10-ந்தேதி) முடிவுக்கு வந்து விடும் என்று தெரிய வந்துள்ளது. அன்றைய தினம் பிரதமர் மோடி திருப்பூர் வந்து சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். 

பாம்பன் ரெயில்வே பாலத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். திட்டப் பணிகள் தொடக்க விழா முடிந்ததும், அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக திருப்பூர் பெருமாநல்லூரில் தனித்தனியாக 2 மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மோடி, புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா மேடையில் அவருடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்ள உள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் மோடியுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே கூட்டணி பேச்சை நடத்தி முடிவு காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

10-ந்தேதி மாலை திருப்பூருக்கு வரும் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நிகழ்ச்சிகளில், எவ்வளவு நேரம் கலந்து கொள்வார்கள் என்ற சுற்றுப் பயண விவரம் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. டெல்லி பிரதமர் அலுவலக அதிகாரிகள் இது குறித்த விவரங்களை இதுவரை வெளியிடவில்லை. 

என்றாலும் 10-ந்தேதி மாலை 6.30 மணிக்குள் பிரதமர் மோடி திருப்பூர் கூட்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கர்நாடகா மாநிலத்துக்கு செல்ல உள்ளார். கர்நாடகாவில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிறகு ஆந்திரா சென்று குண்டூரில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பேச வேண்டியதுள்ளது. 

எனவே திருப்பூர் வரும் பிரதமர் மோடி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மிகவும் பொறுமையாக, நிதானமாக பேச நேரம் கிடைக்குமா, என்பதில் நிச்சயமற்ற நிலை உள்ளது. என்றாலும் அன்றைய தினம் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை மோடியும், எடப்பாடி பழனிசாமியும் உறுதி செய்து விடுவார்கள் என்று இரு தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

அன்று (10-ந்தேதி) அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி உடன்பாட்டை அதி காரப்பூர்வமாக அறிவித்து விட்டு பிறகு இரு கட்சிகளும் தொகுதி பங்கீட்டை முடிவு செய்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் 10-ந்தேதி திருப்பூரில் மோடி பங்கேற்கும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்