Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என்னய்யா டூட்டி பார்க்குறீங்க டிராபிக் இன்ஸ்பெக்டரை ஓபன் மைக்கில் விரட்டிய எஸ்.பி.

மே 13, 2019 11:06

சிவகங்கை: நகரெங்கும் உள்ள வழக்கமான போக்குவரத்து நெரிசலில் தன்னுடைய வாகனமும் சிக்கி மெல்ல தவழ்ந்து முன்னேற, "என்னய்யா டூட்டி பார்க்குறீங்க.?" என நகர டிராபிக் இன்ஸ்பெக்டரை, மாவட்ட எஸ்.பி. ஓபன் மைக்கில் வறுத்தெடுக்க பரப்பரப்பாகியுள்ளது காரைக்குடி துணைச்சரக காவல்துறை.

பாரம்பரியத்திற்கும், கல்விக்கும் பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் மிகப்பெரிய சாபக்கேடு போக்குவரத்து நெரிசலே.!! நகரப் போக்குவரத்துப் போலீசாரால் கல்லூரி சாலை, பெரியார் சிலை, முதல் பீட் மற்றும் இரண்டாம் பீட் ஆகிய இடங்களில் தானியங்கிப் போக்குவரத்து சிக்னல் அமைத்தும், நகர் மற்றும் புறநகரில் 40க்கும் அதிகமான கண்காணிப்பு கேமரா அமைத்தும் இன்று வரை போக்குவரத்து நெரிசலையும், குற்றங்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. 

காரைக்குடிப் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலி எனத் தெரிந்தும் போக்குவரத்துப் போலீசில் இன்ஸ்பெக்டர் முத்துராமன், எஸ்.ஐ.வீரக்குமார் மற்றும் போலீசார் உள்ளிட்டோரின் மொத்த எண்ணிக்கை 20-க்குள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு போலீஸ் மருத்துவ விடுப்பிலும், மூன்று போலீசார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வேலைப் பார்க்க மீதமுள்ள போலீசாரைக் கொண்டு காரைக்குடி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டிய நிலை.

இந்நிலையில், காரைக்குடி அழகப்பா எஞ்சினியரிங்க் கல்லூரி வளாகத்தில் இருந்த சிவகங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப்பெட்டிகளின் பாதுகாப்புக் குறித்துப் பார்வையிட காரைக்குடி வந்துள்ளார் சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யான ஜெயச்சந்திரன். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து மிதந்து வரவேண்டிய சூழ்நிலையால் பழைய பேருந்து நிலையம் தாண்டி முதல் பீட், இரண்டாம் பீட் மற்றும் பெரியார் சிலை தாண்டுவதற்குள், அதிலும் அண்ணபூர்ணா ஹோட்டல் அருகிலும், விவால்டி அருகிலும் அப்பகுதியைக் கடப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது மாவட்ட எஸ்.பி.க்கு.  அதன் பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. 

"என்னய்யா டூட்டிப் பார்க்குறீங்க.? மர நிழலில் இருந்து கொண்டு வண்டியை பிடித்து அபராதம் போடுவதிலேயே இருக்காதீங்க..! மொத்தமே மூன்று பீட்டிலும் 6 பேர் தான் இருக்காங்க.. உங்களுக்கு டிராபிக் வேலை தெரியலையென்றால், ‘எனக்குத் தெரியாது’ எனக்கூறிவிட்டு வேறு எங்கேனும் செல்லுங்கள். வெளியில் டூட்டிக்குப் போனாலும் உங்க ஆட்களை வரவழையுங்க. போதாகுறைக்கு அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் ஆட்களை வரவழையுங்க. சாயந்திரத்திற்குள் சரியாகனும்" என ஓபன் மைக்கில் டிராபிக் இன்ஸ்பெக்டர் முத்துராமனை வறுத்தெடுத்துள்ளார் மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன்.

"எஸ்.பி.கோப்பபட்டதுல தப்பில்ல சார்.! இதுக்கு முன்னாடி இருந்தவங்க சாலையோர ஆக்ரமிப்புக்களை அகற்றுவதில் அக்கறைக் காட்டியதோடு மட்டுமில்லாமல், எங்கெங்கு போக்குவரத்து நெரிசல் இருக்குன்னு பார்ப்பதற்காக நகரெங்கும் ஒரு ரவுண்ட் சுற்றி வருவாங்க. இப்ப அது கிடையாது. முடிந்த வரைக்கும் வாகனத்தை நிறுத்தி வழக்குப்பதிவும், வசூல் செய்வதிலும் இருக்காங்க. அதுவும் டிராபிக்கான இடத்தில் இருந்து வாகன பரிசோதனை செய்றாங்க. இவங்களே பாதி போக்குவரத்து நெரிசலுக்குக் காரணம்" என்கின்றனர் விபரமறிந்தப் போலீசார். 

தலைப்புச்செய்திகள்