Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லாரிகளுக்கு ஆன்லைன் அபராத முறை கைவிடக்கோரி  சென்னையில் விரைவில் ஆர்ப்பாட்டம் மாநில லாரி சம்மேளன தலைவர் தகவல்

பிப்ரவரி 21, 2023 05:16

நாமக்கல் : தமிழகத்தில் லாரிகளுக்கான ஆன்லைன் அபராதம் விதிக்கும் முறையை கைவிடக்கோரி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சம்மேளன தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார்.  செயலாளர் ராஜூ முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், லாரித்தொழிலில் தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட முடிவில் சம்மேளன தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழகத்தில் போலீசார் ஆன்லைன் மூலம் லாரிகளுக்கு  அபராதம் விதித்து வருகின்றனர். இதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.

வடமாநிலங்களில் ஓடிக்கொண்டிருக்கும் லாரிகளுக்கு, தமிழகத்தில் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர். அபராதம் விதித்தது லாரி உரிமையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் வந்த பிறகு தான் தெரிகிறது.

பின்னர் இது தொடர்பாக யாரிடமும் விளக்கம் கேட்க முடியவில்லை. லாரிகள் விதிமுறைகளை மீறி செல்லும்போது, போலீசார் லாரிகளை தடுத்து நிறுத்தி, குற்ற நோட்டீஸ் வழங்கி, டிரைவரிடம் கையொப்பம் பெற்று அபராதம் விதித்தால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை.

இதை வலியுறுத்தி கடந்த ஜனவரி 23 ஆம் தேதி மாதம் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள போலீஸ் எஸ்.பி அலுவலகங்களில், ஆன்லைன் அபராதம் விதிக்கும் முறையை கைவிடக்கோரி, சம்மந்தப்பட்ட லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் மூலம் மனு அளித்தோம்.


பின்னர் 30 ஆம் தேதி சென்னையில் மாநில போலீஸ் டிஜிபிஐ சந்தித்து இது குறித்து மனு அளித்தோம். அவர் எங்கள் பிரச்சினையைக் கேட்டு, மாவட்ட அளவில் உள்ள போலீசாருக்குஅறிவுரை வழங்கி ஆன்லைன் அபராதத்தை கைவிட நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

15 நாட்கள் மட்டுமே ஆன்லைன் அபராதம் விதிப்பது குறைந்தது. கடந்த 1 வாரமாக மீண்டும் ஆன்லைன் அபராதம் விதிப்பது அதிகரித்துள்ளது. எனவே இன்னும் 20 நாட்களில் ஆன்லைன் அபராதம் விதிக்கும் முறையை முற்றிலும் மாற்றி அமைக்காவிட்டால், சென்னையில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மூலம்  ஆயிரக்கணக்கான லாரி உரிமையாளர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 


மேலும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் லாரிகளை எப்.சி பெற சென்றால் குறிப்பிட்ட கம்பெனிகளின் 3 எம் ஸ்டிக்கர்களை மட்டுமே ஒட்ட வேண்டும் எனற விதிமுறை உள்ளது. சாதாரனமாக வெளி மார்க்கெட்டில் ரூ.1,000 க்கு கிடைக்கும் இந்த ஸ்டிக்கர்கள், குறிப்பிட்ட கம்பெனியிடம் இருந்து வாங்கினால் ரூ. 3,500 செலவாகிறது.

இது குறித்து ஏற்கனவே பல முறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேசி அவர்கள் ஒப்புக்கொண்டாலும், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. இது சம்மந்தமாக ஏற்கனவே கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளோம்.

உடனடியாக இதை மாற்றாவிட்டால் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். லாரிகளில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் எடையுள்ள சரக்குகளை ஏற்றினால் தற்போது அதிக அளவில் அபராதம் விதிக்கின்றனர்.

எனவே லாரிகளில் அனுமதிக்கப்பட்ட எடைக்கு மேலும், கூடுதல் உயரம் மற்றும் அகலம் ஏற்றாமலும் லாரி உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

தலைப்புச்செய்திகள்