Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோட்டில் ரிங் ரோடு அமைக்கும் பணிகள்  ஈஸ்வரன் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு 

பிப்ரவரி 21, 2023 05:43

திருச்செங்கோடு : திருச்செங்கோடு நகரில் தொடர்ந்து நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க ரிங் ரோடு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதன்படி திருச்செங்கோடு நகரை சுற்றி சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ. 446 கோடியே 41 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் 10 மீட்டர்  அகலம் கொண்ட ஓமலூர் முதல் திருச்செங்கோடு வரை அமைய உள்ள இணைப்புச் சாலையில் புள்ளிபாளையம் முதல் இளையாம்பாளையம் வரையிலான 13 கிலோமீட்டர் தூர ரிங் ரோடு  அமைக்கப்பட்டு வருகிறது.

திருச்செங்கோட்டில் வடக்கு பகுதியில் புள்ளிபாளையம் பகுதியில் இருந்து எளையாம்பாளையம் வரை சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது . இந்தச் சாலையில் 18 கல்வெட்டு பாலங்களுடன், டிபிஎம் 60 மில்லி மீட்டர் பிசி 40 மில்லி மீட்டர் இருக்கும் படியும், கனரக வாகனங்கள் வர ஏதுவான சாலைப்பணி நடைபெற்று வருகிறது.

ரிங்ரோடு அமைக்கும் பணிகளையும், சாலைக் கட்டுமானத்தையும், கல்வெட்டு பாலங்கள் அமைத்ததையும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆா்.ஈஸ்வரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். 


சாலைகள், கான்கிரீட் சரியான தரத்துடன் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். சில இடங்களில் இருந்த குறைகளை கட்டுமான ஒப்பந்ததாரர்களிடம் சுட்டிக்காட்டி எவ்வாறு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார். மீண்டும் ஆய்வுக்கு வரும்போது இந்த குறைகள் சரி செய்யப்படாவிட்டால் புதிய பாலங்கள் கட்ட வேண்டி இருக்கும் என ஒப்பந்ததாரர்களை எச்சரித்தார். 


ஆய்வுப் பணியின் போது சி கே ஐ சி பி உதவி கோட்டப் பொறியாளர் தாமரைச்செல்வி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சிவகுமார், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ஓ ராஜபாளையம் ஊராட்சி தலைவர் தேவி ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்