Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விசைத்தறி கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு தீர்வு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வழங்க முடிவு

பிப்ரவரி 22, 2023 03:21

குமாரபாளையம் : குமாரபாளையம் விசைத்தறி கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு தீர்வு காணப்பட்டு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வழங்க முடிவு செய்யப்பட்டது.


குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி  பிப். 1 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்தனர். 4 கட்டங்களாக கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு ஏற்படாமல் தள்ளிக்கொண்டே போனது.  


பிப். 17ல் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில்  ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள், தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் இதே குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு 9:30 மணி வரை நீடித்தது. 12 சதவீதம் தருவதாக கூறியதால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையறிந்த தொழிலாளர்கள் தாலுக்கா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்புத்தறி உரிமையாளர்களை கைது செய், என்று கோஷங்கள் எழுப்பினர். பிப். 20ல் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக கூறப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். குமாரபாளையம் போலீசார் அவர்களை கலைய வைத்தனர். இந்நிலையில்  தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்ததில் உடன்பாடு ஏற்பட்டது.

இது குறித்து நகராட்சி சேர்மன் த.விஜய் கண்ணன்  கூறியதாவது:
குமாரபாளையம் விசைத்தறி கூலி உயர்வு குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஜவுளி உற்பத்தியாளர்கள் அடப்பு தறி உரிமையாளர்களுக்கு 15%  கூலி உயர்வும், அடப்பு தறி உரிமையாளர்கள் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20  சதவீத கூலி உயர்வும் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்