Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்ய  விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மார்ச் 15, 2023 03:36

நாமக்கல்,  ஒருவந்தூர் அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தா விட்டால், கலெக்டர் அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என, காட்டுப்புத்தூர் ஆறு, ஏரி, குளம், கிணறு, வாய்க்கால் நீர்பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தினர் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


இது குறித்து விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், எங்கள் சங்கம், திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் செயல்பட்டு வருகிறது. எங்கள் சங்கத்தில், உறுப்பினர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

எங்கள் சங்கத்திற்கு, வாய்க்கால் பாசனம் என்று சொன்னால், நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் பஞ்சாயத்து எல்லையில் இருந்து, காட்டுப்புத்தூர் வாய்க்கால் வழியாக, திருச்சி மாவட்டம், நத்தம் கிராமம் எல்லை வரை, சுமார் 6,000 ஆயிரம் ஏக்கர் நிலம் வாய்க்கால் பாசனத்தை நம்பி உள்ளது.


இந்தவாய்க்காலுக்கு அருகில், ஒருவந்தூரில் இருந்து, கொரம்பு மூலமாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆண்டு முழுவதும், விவசாயத்துக்கும், குடி தண்ணீருக்கும், மழைகாலம் முதல், கோடைகாலம் வரை, தொடர்ந்து தண்ணீர் வழங்கி வருகின்றனர்.

ஆற்றுப் பகுதி பள்ளமாகவும், வாய்க்கால் பகுதி மேடாக உள்ளதால், தண்ணீர் போதுமான அளவு வருவதில்லை இந்த நிலையில் தற்போது, நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் அருகே காவிரி ஆற்றில், மணல் அள்ளுவதற்காக குவாரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதற்கான அடிப்படை வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் மணல் எடுப்பதால், வாய்க்கால் பாசனம் விவசாயம் மற்றும் நிலங்கள் சுத்தமாக வரண்டு பாலைவனமாகும் அபாயம் உள்ளது. மேலும், குடிதண்ணீருக்கு கூடவழி இல்லாமல் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகும் அவலம் உள்ளது.


அதனால், மாவட்ட நிர்வாகம் இதில் தனிகவனம் செலுத்தி, மணல் அள்ளுவதற்கு குவாரி அமைப்பதை தடுத்து நிறுத்தவேண்டும். நிறுத்தாவிட்டால் விவசாமிகளுக்கும், விவசாயம் செய்யும் கூலி தொழிலாளர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

மாவட்ட நிர்வாகம், மணல் குவாரி அமைப்பதை தடை செய்யாவிட்டால், மக்கள் நலன் கருதி காட்டுப்புத்தூர் விவசாயிகள் சங்கத்தின் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, விரைவில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்