Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பள்ளிகளுக்கு வழங்கும் 7.5 சதவீத ஒதுக்கீட்டை  அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க கோரிக்கை

மார்ச் 15, 2023 04:17

நாமக்கல்,  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், மாநில செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டணியின் மாநிலத் தலைவர் ரக்சித் தலைமை வகித்தார். பொருளாளர் பெரியசாமி வரவேற்றார்.


கூட்டத்தில், 2022ம் ஆண்டு செப்டம்பர் 15 முதல், தமிழகத்தில் தற்போது, நகராட்சி, மாநகராட்சி, மலைவாழ் பகுதிகளில் செயல்படும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை, அனைத்து அரசு தொடக்க நடுநிலைப்பள்ளிகளில், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, டேப்லட் கம்ப்யூட்டர் வழங்கப்படும். என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சமவேலைக்கு, சம சம்பளம் ஊதியம் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில், 2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் சம்பள விகிதத்தில் உள்ள முரண்பாடு களைய வேண்டும். பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை, இந்த ஆண்டும் வெளிப்படையாக நடத்த வேண்டும்.

தற்போது காலியாக உள்ள நடுநிலை, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வை உடனே நடத்தி நிரப்ப வேண்டும்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று, பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில், தமிழ் வழிக் கல்வி மூலம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்று மருத்துவமி, பொறியியல் போன்ற மேற்படிப்புக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு அரசு வழங்கும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை, அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் கல்வி கற்பிக்கும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பவை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


முன்னதாக, மாநில பொதுச்செயலாளர் முத்துசாமியின், 87ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது, நாமக்கல் மாவட்டச் செயலாளர் பழனியப்பன் உள்ளிட்ட கூட்டணியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்