Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்செங்கோடு நகராட்சியில் 142 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு  ஆணையாளர் அதிரடி நடவடிக்கை

மார்ச் 22, 2023 03:16

திருச்செங்கோடு : திருச்செங்கோடு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தண்ணீர் கட்டணம், காலி மனை வரி, நகராட்சி வாடகை கடைகளுக்கான வாடகை மற்றும் தொழில் வரி ஆகியவற்றை செலுத்தக் கோரி நகராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ்கள் அனுப்பியும், செய்தித்தாள்கள் மூலம் கேட்டுக் கொண்டும். நேரடியாக நகராட்சி பணியாளர்களைக் கொண்டு வரி செலுத்துமாறு வலியுறுத்தியும்  இதுநாள் வரை சிலர் வரி செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.

திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி ரூ.3.41 கோடியாகவும், குடிநீர் கட்டணம் ரூ1.43 கோடியாகவும், காலிமனைவரி ரூ.1.53 கோடியாகவும், தொழில்வரி ரூ.1.03 கோடியாகவும், வரியில்லா இனம் ரூ.85 லட்சமாகவும் நிலுவையில் உள்ளது.  


இந்நிலையில் கடந்த 15 நாட்களில் மட்டும் 142 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரி செலுத்தாமல் ஆயிரம் பேருக்கு மேல் திருச்செங்கோடு நகராட்சியில் உள்ளனர். இவர்களுக்கென பிரத்யோகமாக தினந்தோறும் நகராட்சி பணியாளர்கள் நோட்டீஸ் வழங்கியும், நேரில் சென்று வலியுறுத்தியும் மேலும் தொலைபேசி வாயிலாகவும் வரியை செலுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருந்தும் சிலர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகின்றனர். 


எனவே. இவர்களது சொத்துக்களை ஜப்தி செய்வதற்காக அரசு வழக்கறிஞருடன் நகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. ஆகவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினை செலுத்தாதவர்கள் உடனடியாக நகராட்சி கருவூலத்தில் செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும் மார்ச் மாதம் முடியவுள்ளதால் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் நகராட்சி கருவூலம் தொடர்ந்து இயங்கும் என நகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்