Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பால் கொள்முதல் விலையை ரூ.7 உயர்த்தக் கோரி  வரும் 28 ம் தேதி முதல் கறவை மாடுகளுடன் போராட்டம்

மார்ச் 25, 2023 05:26

நாமக்கல், நாமக்கல்லில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் முகமது அலி தலைமை வகித்தார் மாநில பொதுச் செயலாளர் பெருமாள் முன்னிலை வைத்தார் இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.


கூட்ட முடிவில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது அலி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 5 லட்சம் குடும்பங்கள் ஆவினுக்கும், 10 லட்சம் குடும்பங்கள் தனியார் நிறுவனங்களுக்கும் தினசரி சுமார் 2 கோடி லிட்டர் பாலை வழங்கி வருகின்றனர். கறவை மாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய, கலப்பு தீவனம், தவிடு புண்ணாக்கு உட்பட அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன.


இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டங்கள், ஆர்ப்பாட்டம், கறவை மாடுகளுடன் மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு, ஆவின் நிர்வாகம் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி கொடுப்பதாக தன்னிச்சையாக அறிவித்தது.


இது பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. எனவே ஆவின் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு பால்கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ. 7 உயர்த்தி வழங்க வேண்டும். கர்நாடகா உள்ளிட்ட இதர மாநிலங்களில் ஊக்கத்தொகை வழங்குவதைப் போல் தமிழ்நாடு அரசும் ஒரு விட்டருக்கு ரூ.5 வீதம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டும். கால்நடை தீவனங்கள் ஆவின் மூலம் 50 சதவீத மானிய விலையில் வழங்கிட வேண்டும்.

பாலின் தரத்தை நிரிணமிக்க எம்.ஆர்.எப் பார்முலாவை கைவிட்டு ஐ.எஸ்.ஐ பார்முலாவை பயன்படுத்திட வேண்டும். ஆவின் பால் வினியோகத்தை சீரமைக்க வேண்டும்.


இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள பால் கொள்முதல் நிலையங்கள் முன்பு கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்