Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீரேற்று பாசன சங்க நிர்வாகிகளை அலுவலகத்திற்குள் பூட்டி வைத்த விவசாயிகள் 

ஏப்ரல் 10, 2023 06:19

நாமக்கல்,  நீரேற்று பாசன சங்க நிர்வாகிகளை அலுவலகத்திற்குள் பூட்டி வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினா். நீரேற்று பாசன திட்டத்தில் இருந்து, குழாய்களில் தண்ணீர் திறந்துவிடாததால், பயிர்கள் காய்ந்து வரும் நிலையில், நீரேற்றுப் பாசன சங்கத்துக்கு வந்த, நிர்வாகிகளை விவசாயிகள் சிறைப்பிடித்து அலுவலகத்தை பூட்டியதால் மணப்பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள மணப்பள்ளி கிராமத்தில், மணப்பள்ளி நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. 
இச்சங்கத்தில், அப்பகுதியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்கத்தின் மூலம், 400 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, காவிரி ஆற்றின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து, மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து, விவசாயிகளுக்கு பகுதி வாரியாக பிரித்து, முறை வைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த தண்ணீரைக் கொண்டு, விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், சங்க நிதியில் இருந்து முறைகேடு செய்துள்ளதாக, நீரேற்றுப் பாசன சங்கத் தலைவர் அப்பாவு மீது, ஏற்கனவே விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

இதனால் கோபமடைந்த அப்பாவு வஞ்சம் தீர்க்கும் வகையில், விவசாயிகளுக்கு தண்ணீர் எடுத்து விடும் மோட்டார் அறையை, கடந்த சில நாட்களுக்கு முன், பூட்டி விட்டதாக கூறப்படுகிறது. அதனால், நீரேற்று பாசன திட்டத்தில் மூலம் யாருக்கும் கடந்த சில நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை.

தண்ணீர் இன்றி, தோட்டத்தில் பயிரிட்டுள்ள பயிர்கள் காய்ந்ததால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். இதற்கிடையில், விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் முன்னாள் செயலாளர் சண்முகம், மோட்டார் பம்ப் ஆப்பரேட்டர்கள் மலையப்பன், சுப்ரமணியன் ஆகிய மூவரும் அலுவலகத்தைத் திறந்து உள்ளே சென்றனர்.

அதைக்கண்ட விவசாயிகள், கடந்த சில நாட்களாக தண்ணீர் திறந்துவிடாத நிலையில், எதற்காக, அலுவலகம் வந்தீர்கள். இங்குள்ள ஆவணங்களை எடுத்துச் செல்ல வந்தீர்களா எனக்கேட்டு, 3 பேரையும் சங்க அலுவலகத்திற்குள் அடைத்து வைத்து, சங்க அலுவலகத்தை பூட்டி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தகவல் அறிந்த மோகனூர் போலீஸ் எஸ்.ஐ.க்கள் நடராஜன், சங்கர் ஆகியோர் வந்து, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்தனர். அதையடுத்து, சங்க அலுவலகத்தை திறந்து, மூன்று பேரையும் மீட்டனர்.

தொடர்ந்து, மோட்டார்களை இயக்கி தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதையடுத்து, போலீஸ் ஸ்டேசன் சென்ற இரு தரப்பினரிடமும், இன்ஸ்பெக்டர் தங்கவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். 


இது குறித்து, மணப்பள்ளி நீரேற்று பாசன சங்க தலைவர் அப்பாவு கூறியதாவது:-
2022, நவம்பர் மாதம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள, 57 கூட்டுறவு நீரேற்று பாசனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய கலெக்டர் ஜனவரி 28 முதல், ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கும் வரை, நீரேற்றுப் பாசன சங்கங்கள், மோட்டார்களை ஓட்டி, காவிரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தினார்.

அதேபோல் பொதுப்பணி மற்றும் மின் வாரியத்துறையினர், மின் இணைப்பை துண்டித்து, மோட்டார் இயக்கக் கூடாது என எச்சரித்துள்ளனர். அதனால்தான் மோட்டார்களை இயக்கி தண்ணீர் விநியோகம் செய்யவில்லை.

மேலும், என் மீது ஆதாரமில்லாத புகார்களை கூறாமல், சங்கத்தின் முழு பொறுப்பையும், நிர்வாக குழுவில் உள்ள யாராவது ஏற்றுக் கொண்டால், அவர்களிடம் முழு பொறுப்பையும் ஒப்படைத்து விடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்