Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தண்ணீர்பந்தல்பாளையம் முகாமில் நலத்திட்ட உதவிகள்  மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா.பி சிங் வழங்கினார்

ஏப்ரல் 13, 2023 04:45

நாமக்கல்,  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் மோடமங்கலம் வருவாய் கிராமம், தண்ணீர்பந்தல்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 336 பயனாளிகளுக்கு ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், ரூ.16.76 இலட்சம் மதிப்பீட்டில் 3 புதிய திட்டப் பணிகளுக்கு நிர்வாக அனுமதியினையும்
மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா.பி சிங் வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் ஒவ்வொரு மாதமும்
இரண்டாவது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும் என்றும், இம்முகாம்கள் அப்பகுதி மக்களின் தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கவும், அரசின் அனைத்து திட்டங்கள் குறித்தும் அனைத்து துறைகளின் மூலமாக கண்காட்சி அமைத்து பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து விளக்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அதன்படி, குமாரபாளையம் வட்டம் மோடமங்கலம் வருவாய் கிராமம்,
தண்ணீர்பந்தல்பாளையம் ஊராட்சியில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம்
நடைபெற்றது.


மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளதையொட்டி, இப்பகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு மாத காலத்திற்கு முன் வருவாய் கோட்டாட்சியர், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகிய துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மங்கலம் கிராம பகுதிக்கு வந்து கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மனுக்களை பெற்று வந்தனர். 


மேலும் அந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேவையான பிற ஆவணங்கள் மனுதாரரிடமிருந்தும், வருவாய்த்துறை அலுவலர்களிடமிருந்தும் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட
வேண்டியிருந்தால் அந்த பணிகளையும் விரைந்து மேற்கொள்ளப்பட்டது.

இம்முகாமில், வருவாய்த்துறையின் சார்பில் ரூ.77.28 லட்சம் மதிப்பில் 187
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 18 முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் ரூ.1000/- பெறுவதற்கான ஆணைகளையும், 23 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், வேளாண் வளர்ச்சி உழவர் நலத்துறையின் சார்பில் ரூ.6,588/- மதிப்பல் 5 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்களும், பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.75,000/- மதிப்பில் 3 பயனாளிகளுக்கு பட்டுபுழு வளர்ப்பாளர் அனுமதி புத்தகமும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ரூ.1,000/- மதிப்பில் 2 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், கூட்டுறவுத் துறையின் ரூ.2.56 இலட்சம் மதிப்பில் 4 பயனாளிகளுக்கு வட்டியில்லா பயிர் கடன் உதவியும், மாவட்ட தொழில்
மையம் சார்பில் 1.20 கோடி மதிப்பில் 3 பயனாளிகளுக்கு ஆயத்த ஆடைகள் தயாரிக்க அனுமதி ஆணைகளையும், மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ரூ.22,000/- மதிப்பில் உயர் கல்வி பயில கடனுதவி ஆணைகளையும், ரூ.35,000/- மதிப்பில் இயற்கை மரணம் அடைந்த குடும்பத்தினருக்கு நிதியுதவியும், முதலமைச்சர் விரிவான காப்பீடு
திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்ட
அட்டைகளையும், குழந்தைகள் பாதுகாப்புத் துறையின் சார்பில் ரூ.1.44 இலட்சம் மதிப்பில் 3 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.


மேலும், மகளிர் திட்டத்துறையின் சார்பில் ரூ.25.00 இலட்சம் மதிப்பில் 4 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் பெறுவதற்கான ஆணைகளையும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் ரூ.8.45 இலட்சம் மதிப்பில் 3 பயனாளிகளுக்கு கல்வி கடன் பெறுவதற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.7,530/- மதிப்பில் 4
மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவியும் மற்றும் ஊன்று கோலும், மருத்துவத்துறையின் சார்பில் ரூ.10,000/- மதிப்பில் 5 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் ரூ.12,000/- மதிப்பில் 2 பயனாளிகளுக்கு
தையல் இயந்திரம் மற்றும் சலவை பெட்டியும் மாவட்ட ஆட்சித்தலைவர் 
வழங்கினார்.


அதனைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.16.76 இலட்சம்
மதிப்பீட்டில் 3 புதிய திட்டப் பணிகளுக்கு நிர்வாக அனுமதியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.


முன்னதாக வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, பட்டு வளர்ச்சி துறை, சமூக நலத்துறை, தாட்கோ, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட துறை, முதலமைச்சர் மற்றும் பாரத பிரதமரின் மருத்துவ அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் உள்ளிட்ட அரசு துறைகளில் செயல்படுத்தப்படும்
திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  நேரில் பார்வையிட்டார்.


பின்னர், மக்கள் தொடர்பு திட்ட முகாமையொட்டி அமைக்கப்பட்ட கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமில் கலந்து கொண்ட நபர்களுக்கும் எடை, உயரம் ஆகியவை அளக்கப்பட்டு இரத்த அழுத்த பரிசோதனை, கண் பரிசோதனை, நீரிழிவு நோய் கண்டறிய இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர்  பார்வையிட்டார்.

இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார்,
இணைபதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் த.செல்வகுமரன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா, மாவட்ட தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், வேளாண் இணை இயக்குநர் எஸ்.துரைசாமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செ.சதீஸ்குமார், மாவட்ட சமூகநல அலுவலர் பி.கே.கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் என்.முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுகந்தி, உதவி ஆணையர் கலால்
எம்.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)
கா.முருகன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்