Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அளக்கரை தேயிலை தோட்டத்தில், குட்டிகளுடன் உலா வரும் கரடி: தொழிலாளர்கள் பீதி

மே 13, 2019 12:51

கோத்தகிரி: கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களை அழித்தும், வனப்பகுதிகளை ஆக்கிரமித்தும் தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் வாழிடம் குறைந்து காட்டெருமை, புலி, கரடி, சிறுத்தைப்புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதனருகில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் புகுவது வழக்கமாக இருக்கிறது.

அப்போது மனித-வனவிலங்கு மோதல் நடைபெறுகிறது. இது தவிர வனத்துறையில் போதிய ஊழியர்கள் இல்லாததால், கோத்தகிரி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினரும் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் கோத்தகிரி அருகே அளக்கரை பகுதியில் தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதனருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் முதுகில் 2 குட்டிகளை சுமந்தபடி தாய் கரடி உலா வந்தது. பகல் நேரத்திலேயே தேயிலை தோட்டத்தில் உலா வந்த கரடிகளை பார்த்த பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பீதியில் அலறியடித்து குடியிருப்புகளுக்கு ஓட்டம் பிடித்தனர். நீண்ட நேரம் கழித்து அங்கிருந்து அருகிலுள்ள வனப்பகுதிக்குள் கரடிகள் சென்றன.

நேற்று நள்ளிரவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் தவிட்டுமேடு அருகில் கரடி ஒன்று உலா வந்தது. பின்னர் அங்கிருந்து கோவிலுக்குள் புகுந்து விளக்கில் இருந்த எண்ணெயை குடித்தது. மீண்டும் சாலையில் அந்த கரடி உலா வந்ததால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். மேலும் சற்று தொலைவில் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு, கரடி அங்கிருந்து சென்றதும் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கோத்தகிரி அருகே அளக்கரை, தவிட்டுமேடு, அரவேனு, ஜக்கனாரை, சோலாடா, மூணுரோடு, கேத்தரின் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் வீட்டை வெளியே சென்றுவிட்டு திரும்ப வேண்டியுள்ளது. கரடிகளால் மனிதர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன்பு அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தலைப்புச்செய்திகள்