Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களுக்கு புதிய கார்கள்

மே 10, 2023 08:03

தென்காசி, மே. 11: ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், அவ்வொன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 2008-ஆம் ஆண்டில் முதன்முதலாக வாகனங்கள் வழங்கப்பட்டன. 13 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் இவ்வரசால் தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று  தமிழ்நாடு முதலமைச்சர்  22.04.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக 25 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 200 புதிய ஸ்கார்பியோ வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 12 வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்  மாவட்ட கலெக்டர்  துரை.இரவிச்சந்திரன்  ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் திவ்யா (ஆலங்குளம்), பா. சுப்பம்மாள் (கடையநல்லுர்), சீ.காவேரி (கீழப்பாவூர்),  பி.சங்கரபாண்டியன் (சங்கரன்கோவில்), பொ.முத்தையா பாண்டியன் (வாசுதேவநல்லுர்) ஆகியோருக்கு புதிய ஸ்கார்பியோ வாகனங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)முத்துக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்