Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெல்லை -  மேலப்பாளையம் இரட்டை ரயில் பாதை  பணி

மே 11, 2023 11:23

நெல்லை:தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று  2015-16 ஆம் ஆண்டு  மதுரை – கன்னியாகுமரி வழித்தடம் இருவழிபாதையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி 159 கி.மீ  ஒரு திட்டமாகவும், மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கி.மீ  ஒரு திட்டமாகவும், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் 87 கி.மீ  ஒரு திட்டமாகவும் அறிவிக்கப்பட்டு தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை முதல் நெல்லை வரையும், மேலப்பாளையம் - ஆரல்வாய்மொழி, வாஞ்சி மணியாச்சி  மீளவிட்டான் இடையே இரட்டை அகல ரயில் பாதை பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.

இந்நிலையில் நெல்லை மதகனேரியைச் சார்ந்த வரதன் அனந்தப்பன் நெல்லை - மேலப்பாளையம் இரட்டை அகல ரயில் பாதை பணிகள் குறித்து ஆர்டிஐயில் கேள்வி எழுப்பியிருந்தார்.  அதற்கு ஆர் வி என் எல் தலைமை பொது தகவல் அலுவலர் கைலாஷ் குமார் கூறியதாவது.

நெல்லை -  மேலப்பாளையம் இடையே நடைபெறும் இரட்டை அகல ரயில் பணிகளில் நெல்லை ரயில் நிலைய யார்டு மேம்படுத்துதலும் உள்ளடக்கியது. வரும் ஜனவரி 2024 ல் இரட்டை அகல ரயில் பாதை பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தற்போது 60 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது.  இருப்பு பாதைகளை இணைத்தல், பிரிந்து செல்லும் தண்டவாளங்களை அமைத்தல், சிக்னல் கம்பங்கள் அமைத்தல், உயர் மட்ட மின் வயர்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளது. 2000 ச. மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படாமல்  உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக 62.65  கோடிமாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சிறிய மற்றும் பெரிய பாலங்கள் பணி முடிவடைந்துள்ள நிலையில் தண்டவாளத்திற்கான  மண் அடித்தளம் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி சவாலாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் வரதன் கூறுகையில், தற்போது சென்னையிலிருந்து நெல்லை வரை இரட்டை அகல ரயில் பாதை பணிகள் 100% நிறைவு பெற்றுள்ள நிலையில் மதுரையில் இருந்து  வரும் அனைத்து ரயில்களும் நெல்லை ரயில் நிலையத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது. நாகர்கோவிலில் இருந்து நெல்லை வரும் ரயில்கள் மேலப்பாளையத்தில் காத்து கிடக்கும் நிலை உள்ளது. மேலும் போதுமான நடைமேடைகள் நெல்லை ரயில் நிலையத்தில் இல்லாததால் செங்கோட்டை, திருச்செந்தூர், நாகர்கோவில், தூத்துக்குடி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் இருந்து வரும் ரயில்களை கையாள முடியாமல் திணறி வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் நிலத்தினை கையகப்படுத்தி தெற்கு ரயில்வே க்கு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் மேலப்பாளையம் நெல்லை இரட்டை ரயில் பாதை பணிகள் உடனடியாக முடிக்கப்பட்டு நெல்லை ரயில் நிலைய யார்டு மேம்படுத்தப்பட வேண்டும். நெல்லை ரயில் நிலையத்தில் மூன்று நடை மேடைகள் கூடுதலாக அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் சென்னை, பெங்களூரு கோவை மற்றும் வட மாநிலங்களில் இருந்து கூடுதலான ரயில்களை இயக்க முடியும். என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்