Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவ,மாணவிகளின் தனித்திறனை வெளிக்காட்டும் நிகழ்ச்சி

மே 15, 2023 12:51

தென்காசி:தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில்,கோவில் நிர்வாகம் சார்பில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில்,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். 

கடந்த வாரம் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாணவ,மாணவிகளின் தனித்திறமையை வெளிக்காட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தங்களது பெற்றோர் மற்றும் தாத்தா,பாட்டியுடன் வருகை தந்த மாணவ, மாணவியர் அவர்களுக்காக தயார் செய்திருந்த மேடையில் ஏறி, தாங்கள் விரும்பிய பாடல் பாடுதல், கதை, கட்டுரை சொல்லுதல், நடனம், ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினர். தாங்கள் படித்த பள்ளிகளில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் தாங்கள் பங்கேற்ற நிகழ்வுகளையும் இங்கே செய்து காட்டினர்.

சென்னை நீதிமன்ற நீதியரசர் சிவாஜி செல்லையா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இன்பசேகரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்து பேசினர். திரைப்படங்கள், சின்னத்திரையில் நடித்து வரும் கீழப்பாவூரைச் சேர்ந்த நடிகரும், இயக்குனருமான பாரதிகண்ணன் (எ) கலிவரதகண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ, மாணவியருக்கு பல்வேறு அறிவுரைகளை எடுத்துக்கூறியதுடன், பள்ளிகளில் ஆசிரியர்கள் கல்வியுடன், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும் எனக்கூறினார்.
நிகழ்ச்சியில் தனித்திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாணவ, மாணவிகள் பயனுள்ளதாக விடுமுறைகளை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என கோவில் பரம்பரைஅறங்காவலர் செண்பகராமன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்