Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கமல்ஹாசன் கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும்: தேர்தல் கமிஷனிடம் பாரதீய ஜனதா புகார்

மே 14, 2019 10:51

புதுடெல்லி: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது, நாதுராம் கோட்சே பற்றி பேசியதற்கு, பாரதீய ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாயா இந்திய தலைமை தேர்தல் கமிஷனில் இது தொடர்பாக ஒரு புகார் மனு அளித்தார்.

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே. மகாத்மா காந்தியை படுகொலை செய்த இந்து பயங்கரவாதி” என்று பேசி உள்ளார். அதிக அளவில் திரண்டிருந்த முஸ்லிம் மக்கள் முன்னிலையில் ஓட்டுக்காக வேண்டுமென்றே இவ்வாறு அவர் பேசி இருக்கிறார். இது 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 123 (3) கீழ் ஊழல் நடைமுறை என்பது தெளிவாக தெரிகிறது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, கட்சி மற்றும் வேட்பாளர்கள் மொழி ரீதியாகவோ, மதம் அல்லது சாதி ரீதியாகவோ பரஸ்பரம் வெறுப்பை உருவாக்கும் வகையிலும், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் அல்லது வணக்கம் செலுத்துவதற்கு உரிய மற்ற இடங்கள் ஆகியவற்றை தேர்தல் பிரசாரத்துக் கான மன்றமாக பயன்படுத்தக்கூடாது. இந்த விதிகளை கமல்ஹாசன் மீறி உள்ளார்.

கமல்ஹாசன் வேண்டுமென்றே மதத்தின் அடிப்படையில், வெவ்வேறு பிரிவினருக்கு இடையே பகைமையை ஊக்குவிக்கிறார். ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் சீர்குலைக்கும் செயல்களை செய்கிறார். இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 ஏ-ன் கீழ் குற்றம் ஆகும். மேலும் கோடிக்கணக்கான இந்துக்களின் சமய உணர்வுகளை சீர்குலைக்கும் இந்த செயல், பிரிவு 295 ஏ-ன் கீழ் மேலும் ஒரு குற்றம் ஆகும்.

‘தேர்தல் நடத்தை’ என்பது பரவலாக புரிந்துகொள்ளப்பட்ட ஒன்று. அமைதியான தேர்தலை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டும். அதற்கு தேர்தல் கமிஷனுக்கு முழு உரிமை இருக்கிறது.

எனவே, மேற்கூறிய உண்மையான குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு, இந்திய அரசியல் அமைப்பின் 324-வது அட்டவணைப்படி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கு, கமல்ஹாசன் குறைந்தபட்சம் 5 நாட்களாவது தேர்தல் பிரசாரம் செய்யாமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அவர் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

அது மட்டுமல்லாமல் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவுக்கு தமிழக பா.ஜ.க.வின் சட்டப்பிரிவு மாநிலத் தலைவர் ஆர்.சவுந்திரராஜன் புகார் மனு அளித்து உள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய கமல்ஹாசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்