Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புண்ணாக்கு விலை உயர்வால் மாட்டுக்கு உணவாக பயன்படுத்தப்படும் ரேஷன் அரிசி

மே 15, 2019 05:39

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் அரிசி மற்றும் கோதுமை குறிப்பிட்ட கார்டுகளுக்கு மட்டும் விலையில்லா வழங்கப்படுகிறது. மற்ற பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. இவற்றை, நுகர்பொருள் வாணிப கழகம், இந்திய உணவு கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு, வினியோகம் செய்யப்படுகிறது.

கார்டுதாரர்களுக்கு அரிசியை பொறுத்தவரையில் 20 கிலோ வரை இலவசமாக வழங்கப்படுகிறது. கார்டுதாரர்கள் விரும்பும் புழுங்கல் மற்றும் பச்சரிசியை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் பாமாயில், பருப்பு, சர்க்கரை போன்ற உணவு பொருட்களும் வழங்கப்படுகிறது.

சென்னை புறநகர் பகுதிகள்

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பதிலாக கால்நடைகளுக்கு உணவாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனை தடுத்து தேவைப்படுபவர்களுக்கு வழங்க கூட்டுறவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து தாம்பரத்தை சேர்ந்த முனியசாமி என்பவர் கூறியதாவது:-

ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி மாதம் 20 கிலோ வழங்கப்படும் அரிசியை மாடுகளுக்கு காய்ச்சி கொடுக்கிறோம். காரணம் புண்ணாக்கு விலை உயர்ந்து கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுவதால் அதனை வாங்கி மாடுகளுக்கு கொடுக்க முடியவில்லை. இதனால் ரேஷன் பச்சரிசியை வாங்கி மாடுகளுக்கு வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கால்நடைகளுக்கு ரேஷன் அரிசி

இதுகுறித்து தாம்பரத்தை சேர்ந்த முரளிதரன் என்பவர் கூறியதாவது:-

ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க அரசு எவ்வளவோ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தற்போது ஸ்மார்ட் கார்டு மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிலும் போலி ஸ்மார்ட் கார்டுகள் மூலம் முறைகேடுகள் நடந்து வருகிறது. உணவு பொருட்களின் எடையும் ஒழுங்காக இருப்பதில்லை. தற்போது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தரமான உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் வெள்ளை நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுவதில்லை. மாறாக சர்க்கரை மட்டும் 5 கிலோ வழங்கப்படுகிறது.

தற்போது ரேஷன் கடைகளில் பச்சரிசி தரமானதாக வழங்கப்படுகிறது. இதனை பலர் இலவசமாக வாங்கி கால்நடைகளுக்கு உணவு பொருளாக பயன்படுத்துகின்றனர். தேவைப்படுபவர்களுக்கு வழங்காமல் இதுபோன்று கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்துபவர்களுக்கு ரேஷன் பச்சரிசியை வழங்குவது ஏற்க முடியாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

ஏமாற்றம்

அதேபோல் மாத தொடக்கத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால், 3-வது வாரத்தில் பொருட்கள் வாங்க சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. குறிப்பிட்ட அளவு மட்டுமே உணவு பொருட்கள் வழங்கப்படுவதால் மாத தொடக்கத்தில் வந்து வாங்கி செல்ல வேண்டும். தவறினால் உணவு பொருட்கள் வழங்க இயலாது என்று கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மாதத்தில் எந்த தேதியில் வந்தாலும் உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இதில் யார் கூறுவதை நம்ப வேண்டும் என்று தெரியவில்லை. முறையான வகையில் உணவு பொருட்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்