Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடிநீர் வாரிய தண்ணீரை விற்ற 15 லாரிகளுக்கு ரூ.7½ லட்சம் அபராதம்

மே 15, 2019 05:41

சென்னை: சென்னை நகரில் வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை எழுந்துள்ளது. பல தெருக்களில் குடிநீர் குழாய்களை திறந்தால் தண்ணீருக்கு பதிலாக காற்று தான் வருகிறது. தற்போது குடிநீர் வாரியம் சப்ளை செய்யும் தண்ணீரை நம்பியே மக்கள் அன்றாட தேவையை ஓரளவு சமாளித்து வருகிறார்கள். குடிநீர் வாரிய லாரி எப்போது வரும் என்று பெண்கள் காலி குடங்களுடன் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்.

சென்னை குடிநீர் வாரியத்தில் 900 லாரிகள் ஒப்பந்த முறையில் இயக்கப்படுகின்றன. இந்த லாரிகள் மூலம் ஒரு நாளைக்கு 8 ஆயிரத்து 500 நடைகள் தண்ணீர் சப்ளை செய்யப்படுகின்றன. இதில் 6 ஆயிரம் நடைகள் இலவசமாகவும், 2 ஆயிரத்து 500 நடைகள் வணிக ரீதியாகவும் சப்ளை செய்யப்படுகின்றன.

அபராதம்

இந்தநிலையில் இலவசமாக வழங்கப்படவேண்டிய தண்ணீரை சில லாரி டிரைவர்கள் ஓட்டல்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் தனியாருக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் சிரமம் அடைந்து வந்தனர். எனவே ஜி.பி.எஸ். கருவி மூலம் குடிநீர் வாரிய லாரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன. மேலும் தண்ணீர் விற்பனையை தடுக்க ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு பறக்கும் படை அதிகாரி குழுவை குடிநீர் வாரியம் நியமித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளால் மக்களுக்காக இலவசமாக வழங்கவேண்டிய தண்ணீரை விற்பனை செய்த 15 லாரிகள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த லாரி உரிமையாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.7½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற முறைகேடுகளில் குடிநீர் வாரிய லாரிகள் ஈடுபட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.

தலைப்புச்செய்திகள்