Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

ஜுலை 03, 2023 04:53

நாமக்கல்: தமிழகத்தில் உரிய அனுமதி பெற்று, கனிமவளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு, போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்லராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், கடந்த 26 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு, மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளிக்கவில்லை.

எங்கள் லாரிகளை தொடர்ந்து இயக்கி வருகிறோம். ஆனால், மணல், எம்.சேண்ட், பி.சேண்ட் உள்ளிட்ட கனிமங்களை எடுத்து செல்லும் லாரிகளை, ஆங்காங்கே தடுத்து நிறுத்தி, டிரைவர்களை கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கத்தினர் அடியாட்கள் மூலம் மிரட்டி வருகின்றனர்.

இது குறித்து, கடந்த 1ம் தேதி சென்னையில், டி.ஜி.பி அலுவலகத்தில், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் சென்று புகார் அளிக்கப்பட்டது.

கனிம வளங்களை எடுத்துச் செல்லும் லாரிகளை கிரஷர் குவாரி உரிமையாளர்கள் தடுக்கின்றனர்.

அதனால் தமிழகத்தில், மணல் மற்றும் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கனிமவளங்களை ஏற்றிச் சென்ற லாரிகளை, கிரஷர் உரிமையாளர் சங்கத்தினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

மேலும், அந்த லாரியின் டிரைவரை தாக்கியும், லாரிகளில் இருந்து லோடுகளை கீழே கொட்டி சேதப்படுத்தி, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், போராட்டத்தில் ஈடுபடாத, 200 க்கும் மேற்பட்ட கல் குவாரி, கிரஷர் ஆலைகள் இயங்கி வருகின்றன. அவர்களிடம் இருந்துதான், மணல் லாரி உரிமையாளர்கள், கனிம வளங்களை வாங்கி, விற்பனைக்கு எடுத்து செல்கிறோம்.

உரிய அனுமதியுடன் இயங்கும் அந்த லாரிகளுக்கு, தமிழக போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்