Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துகள்: அதிகாரிகள் ஆய்வு

ஜுலை 03, 2023 05:27

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடங்களில் தொடர் சாலை விபத்துக்கள் நடந்து வருகிறது. இந்த விபத்துகள் மூலம் உயிரிழப்பும், உடல் உறுப்புகள் இழப்பும் ஏற்பட்டு, பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக, சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல் மாவட்டத்தில், மல்லூர், பாச்சல் பிரிவு, புதன்சந்தை, கருங்கல்பாளையம், பெருமாள்கோவில்மேடு, பொம்மைக்குட்டைமேடு, கீரம்பூர் உள்ளிட்ட, 8 இடங்களில், அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.

இந்தநிலையில், நாமக்கல் கலெக்டர் உமா உத்தரவின்படி, நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், நித்யா, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மோகன் மற்றும் போக்குவரத்து போலீசார், மல்லூர் முதல், கீரம்பூர் வரையில் உள்ள, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், விபத்துக்கள் அதிகம் நடக்கும் 8 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த இடங்களில், தொடர் விபத்துக்கள் நடப்பதற்கான காரணங்கள், அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அதனை தொடர்ந்து, மல்லூர் பிரிவு மற்றும் பாச்சல் பிரிவு ஆகிய இடங்களில், மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பரிந்துரை செய்தனர்.

மேலும், மல்லூர் பிரிவில் இருந்து, அத்தனூர் அம்மன் கோவில் வரை சென்டர் மீடியனில், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் குறுக்கே சாலையை கடந்து செல்வதை தடுக்கும் வகையில், தடுப்புவேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதே போல், பெருமாள் கோவில்மேடு, பொம்மைகுட்டைமேடு ஆகிய பகுதியில், சாலை சந்திப்புகளை மேம்படுத்தப்படுத்தவும், பேரிகார்டுகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்