Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் தீவனப்பயிர்கள் சாகுபடி பயிற்சி

ஜுலை 04, 2023 12:42

நாமக்கல்: தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்ட நிதியுதவியுடன், கால்நடைகளுக்கான தீவனப்பயிர்கள் சாகுபடி முறைகள் குறித்து வருகிற 10ம் தேதி நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இலவச பயிற்சி துவங்குகிறது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில், வருகிற 10ம் தேதி திங்கட்கிழமை முதல் 14ம் தேதி வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள், தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்ட நிதியுதவியுடன், கால்நடைகளுக்கான தீவனப்பயிர்கள் சாகுபடி மற்றும் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தீவனப்பயிர்களின் முக்கியத்துவம், மண்வளங்களுக்கேற்ற தீவனப்பயிர்களின் வகைகள், தானியவகைகள், புல்வகைகள், பயறு வகைகள் மற்றும் மரவகைத் தீவனப் பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்படும்.

தீவனப்பயிர்களின் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள், ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறைகள் குறித்து விரிவான தொழில்நுட்ப விளக்கம் அளிக்கப்படும். மேலும் தீவனப்பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். 

இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள், புத்தகங்கள் மற்றும் தீவன விதைகளும் வழங்கப்படும்.

மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள் 04286-266572 மற்றும் 04286-266491 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என  அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்