Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா

ஜுலை 05, 2023 06:04

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.

இங்கு அரியும், சிவனும் ஒன்று என்பதை கோமதி அம்மனுக்கு உணர்த்தும் வகையில் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் அன்று சிவபெருமான் சங்கர நாராயணராக கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். 

இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா வருகின்ற ஜூலை 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இந்த ஆடித்தபசு திருநாள் 12 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம்  வருகின்ற ஜூலை மாதம் 31ம் தேதி திங்கள் கிழமை நடைபெற உள்ளது. 

அதனை தொடர்ந்து ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறையினர் ஆலோசனை கூட்டம் சங்கரன் கோவில் நகராட்சி அலுவலகத்தில் வைத்து நடந்தது. இக்கூட்டத்திற்கு எம்.எல்.ஏ ராஜா தலைமை வகித்தார். 

மேலும் சங்கரன் கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகராட்சி கமிஷனர் சபா நாயகம், கோயில் துணை ஆணையர் ஜான்சி ராணி, முன்னிலை வகித்தனர். 

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட  தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ பேசியபோது  ,
ஆடித்தபசு  திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதில் முக்கியமாக தடையில்லா மின்சாரம், தடையில்லா குடிநீர், பொது மக்களுக்கு பாதுகாப்பு ஆகியன முக்கிய அம்சமாகும். எனவே மின் வாரிய அதிகாரிகள், காவல் துறையினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் அனைவரும் நகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும். 

மேலும் தபசு நடக்கும் தெற்கு ரத வீதியில் சுவாமி அம்பாள் சப்பரம் வரும் இடத்தை ஆய்வு செய்து மீதமுள்ள இடத்தை பக்தர்கள்  சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அதிக இடங்கள் விட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும். மேலும்  தீயணைப்பு வாகனங்கள், அவசர கால ஊர்திகள் தயார் நிலையில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நகர் பகுதியில் சுழலும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து அதற்கான கண்ட்ரோல் ரூம் அமைத்து அதனை முறையாக கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதில் நகராட்சி துணை சேர்மன் கண்ணன், காவல் ஆய்வாளர் சகாய சாந்தி, மருத்துவ அலுவலர் டாக்டர் மகாலட்சுமி ,நெடுஞ்சாலை துறை  திருமலைச்சாமி , பலவேசம், மின்வாரிய உதவி பொறியாளர்கள் கணேச ராமகிருஷ்ணன், தங்க மாரிமுத்து, தீயணைப்பு துறை சார்பில் சரவணன் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்