Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மரவள்ளி பயிரில் செம்பேன் கட்டுப்பாடு முறைகள் குறித்து செயல் விளக்கம்

ஜுலை 08, 2023 05:25

ராசிபுரம்: மரவள்ளி பயிரில் செம்பேன் கட்டுப்பாடு முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஒடுவன்குறிச்சி, சீராப்பள்ளி கிராமங்களில், மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, மரவள்ளி பயிரை சேதப்படுத்தும் செம்பேன்கனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து செயல் விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் டாக்டர்.வேல்முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிப் பயிர் சுமார் 18,000 ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது நிலவி வரும் தட்ப வெட்ப சூழ்நிலையில் செம்பேன் அதிகமாக மரவள்ளி பயிரை தாக்கி சேதம் ஏற்படுத்துகிறது. அதனால் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் வயல் ஆய்வு செய்த போது செம்பேன்களின் பாதிப்பு சுமார் 10 முதல் 15 சதம் வரை அனைத்து வட்டாரங்களிலும் கண்டறியப்பட்டது. 

மேலும் 4 வகையான செம்பேன்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பூச்சிகளின் முட்டை நீள் வட்ட வடிவில் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்துடன் காணப்படும். இளம் குஞ்சுகள் வெள்ளை நிறத்தில் காணப்படும். விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகளை கடைபிடிக்காமல் இருப்பதும், மரவள்ளி பயிரில் வெளியாகும் வாசனை வேதிப் பொருட்கள் மூலமும் இந்த பூச்சிகள் கவரப்பட்டு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சுழல் காற்றின் மூலமாக செம்பேன்கள் அதிக அளவில் ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு தீவிரமாக பரவக்கூடும். பெருமழை இல்லாத சமயங்களில் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை அனைத்து விவசாயிகளும் மேற்கொண்டு செம்பேன் பாதிப்பினை கட்டுப்படுத்தலாம். முதலில் பாதிக்கப்பட்ட செடிகளின் இலைகளை அகற்றவேண்டும்.

முறையான நீர் மேலாண்மையை கடைபிடிக்கவேண்டும். களை இல்லாமல் வயலில் இருக்க வேண்டும். சிறிது அளவு பாதிப்பு இருக்கும்போது தண்ணீர் தெளித்து கட்டுபடுத்த வேண்டும். மேலும், வேளாண் அறிவியல் நிலையம் பரிந்துரை செய்யும் மருந்துகளை முறையாக தெளித்து கட்டுப்படுத்த வேண்டும் என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை விஞ்ஞானி சங்கர், உழவியல் துறை விஞ்ஞானி அழகுதுரை, நாமகிரிப்போட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் சேரலாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செம்பேன் கட்டுப்படுத்தும் முறைகளை, வயல்களில் செயல்விளக்கம் மூலம் செய்து காண்பித்தனர்.

தலைப்புச்செய்திகள்