Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பதிவு முகாம் குறித்த ஆய்வு கூட்டம் 

ஜுலை 13, 2023 04:09

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா  தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறும்போது,
நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்றிட வேண்டும். நியாயவிலை கடைகளுக்கு அருகாமையில் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற வேண்டும்.

இதில் விண்ணப்ப பதிவு முகாமில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நகராட்சி ஆணையாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். அனைத்து விண்ணப்ப பதிவு முகாமிலும் விரல் ரேகை பதிவு இயந்திரம் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். ஒரு விண்ணப்ப பதிவு முகாமிற்கு ஒரு பொறுப்பு அலுவலரையும், 5 முகாமிற்கு ஒரு மண்டல பொறுப்பாளரையும், 15 முகாமிற்கு கண்காணிப்பு அலுவலரையும், நியமித்து விண்ணப்ப பதிவு முகாம் சிறப்பாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும். 

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட வேண்டும். பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ச.உமா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் த.செல்வக்குமரன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி ஆகியோர் உட்பட வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்