Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம்

ஜுலை 20, 2023 10:15

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா முன்னிலையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசு செயலாளர்  ஜெ.குமரகுருபரன் பேசியதாவது,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் பொருட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு முகாம் முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.8.2023 வரை நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது. இம்முகமானது காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 5.30 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடைபெறவுள்ளது.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் பணிகளை ஒருங்கிணைக்க 15 முதல்நிலை அலுவலர்களை கொண்ட மாவட்ட அளவிலான பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படையில் முன்னேற்பாடு பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான 24 அலுவலர்களை கொண்ட மாவட்ட அளவிலான மேற்பார்வை குழு அமைக்கபட்டுள்ளது. முதற்கட்டமாக நடைபெறவுள்ள 611 முகாம்களுக்கும் இரண்டாம் கட்டமாக நடைபெறவுள்ள 303 முகாம்களுக்கும் மொத்தம் 914 முகாம் பொறுப்பு அலுவலர்களும் 5 முகாமிற்கு 1 மண்டல அலுவலர் என 126 மண்டல அலுவலர்களும், 15 முகாமிற்கும் 1 மேற்பார்வை அலுவலர் என 49 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கட்டுபாட்டு காலை 10.00. மணி முதல் மாலை 6.00 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் தகுதியுடைய குடும்ப தலைவிகள் அனைவருக்கும் இத்திட்டம் சென்றடையும் வகையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜே.குமர குருபரன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ)லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் த.செல்வகுமரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், உதவி ஆணையர் (கலால்) பாலமுருகன் முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பிரியா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி, வட்டாட்சியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்