Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வழக்கை ரத்து செய்யக்கோரி கமல் முறையீடு

மே 15, 2019 12:06

மதுரை: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய, மக்கள் நீதி மையம் தலைவர் கமல், ''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து; அவன் பெயர் நாதுராம் கோட்சே,'' என்றார்.இதற்கு, பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. 

ஹிந்து முன்னணி, கரூர் மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணன், 'ஹிந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசிய, கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரவக்குறிச்சி போலீசில் நேற்று புகார் கொடுத்தார். இதன்படி, கமல் மீது, 153ஏ - மதத்தினர் இடையே கலவரம் ஏற்படுத்தும் வகையில், சர்ச்சைக்குரிய படி பேசுவது, 295ஏ - ஒரு குறிப்பிட்ட மதத்தினரை பற்றி பேசுவது ஆகிய பிரிவுகளில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இவை இரண்டும், ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகள் ஆகும்.

இந்நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கமல் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, வழக்கை ரத்து செய்வது தொடர்பான மனுவை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க முடியாது. முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் எனக்கூறினார். 

முன்னதாக, கமலுக்கு எதிராக டில்லி உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.,வின் அஸ்வினி உபத்யாயா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில் கமல் பேசியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடாமல், டில்லி வந்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பியது. 

இதற்கிடையில் திருவள்ளூர், சீர்காழி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் கமலுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்